இந்தியாவில் உள்ள அனைத்து குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணி கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு, கியாஸ் இணைப்பு ஆகியவற்றை மத்திய அரசு இணைத்து மானியம் வழங்குவதால் ஆதார் அடையாள அட்டை ரேஷன் கார்டு போலவே முக்கியமான அடையாள அட்டையாக கருதப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுக்க 640 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் கடந்த ஜூலை மாதம் வரை 5 கோடியே 60 லட்சம் பேருக்கு புகைப்படம் எடுத்து தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதியுள்ள நபர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இது குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை இணை இயக்குனர் கிருஷ்ணாராவ் அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “இதுவரையில் 5 கோடியே 60 லட்சம் பேர் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். 5 கோடியே 22 லட்சத்து 77 ஆயிரம் பேருக்கு ஆதார் அடையாள அட்டை வினியோகம் செய்யப்பட்டுள்ளது. டேட்டா எண்ட்ரி 32 ஆபரேட்டர்கள் மூலம் செய்யப்படுகின்றன. ஆதார் அடையாள அட்டை புகைப்பட பணி 83.36 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஆதார் புகைப்படம் எடுத்து கொண்டதில் தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 98.82 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. 90 சதவீதத்திற்கு மேல் நாகப்பட்டினம், பெரம்பலூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

80 முதல் 85 சதவீதப்பணிகள் 9 மாவட்டங்களில் முடிந்துள்ளன. மிக குறைந்த அளவில் பதிவான மாவட்டம் திருப்பூர் மாவட்டமாகும். அங்கு 72.74 சதவீதமாகும். சென்னை மாவட்டத்தில் 75.68 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. 80 சதவீதத்திற்கு கீழே 7 மாவட்டங்கள் உள்ளன. ஆதார் புகைப்படம் எடுக்க கால அவகாசம் அக்டோபர் மாதம் வரை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த கால அவகாசம் டிசம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. கால அவகாசம் இருப்பதால் பொது மக்கள் பதட்டப்படாமல் புகைப்படம் எடுக்க வரலாம். கூட்ட நெரிசலில் காத்து நிற்பதை தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் வார்டு அலுவலகங்கள், மாநகராட்சி 15 மண்டல அலுவலகங்கள், 10 தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம், எழிலகம் ஆகிய இடங்களில் புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

English Summary : Indian government extended the time period to attach photo in Aadhar card till December.