சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு உலகம் முழுவதிலும் இருந்து முதலீட்டாளர்கள் பெருமளவில் வரவிருப்பதை ஒட்டி சென்னை சாலைகளின் தரத்தை மேம்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மொத்தம் 194 பேருந்து தட சாலைகளை புதுப்பிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாகவும் முதல் கட்டமாக 40 சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே போடப்பட்ட சாலைகள் மீதே புதிய சாலை போடாமல், ஏற்கெனவே போட்ட சாலைகளை தோண்டியெடுத்துவிட்டு, புதிய சாலை போடப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த புதிய சாலைக்காக தமிழக அரசு ரூ.330 கோடியும் சென்னை மாநகராட்சி ரூ.120 கோடியும் ஒதுக்கியுள்ளது. முதல் கட்டமாக கிரீம்ஸ் சாலை, சர்தார் பட்டேல் சாலை, பீட்டர்ஸ் சாலை உள்பட 25 சாலைகளில் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் இந்த சாலைகளின் பணி நிறைவடையும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு நீண்ட நாட்களுக்கு பின்னரே புதிய சாலை போடப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருவதாக கூறப்பட்ட புகார் குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறிய போது, “எல்லா சாலைகளையும் ஒரே நேரத்தில் தோண்டி எடுத்தால் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக இருக்கும் என்பதால் முதலில் 40 சாலைகளில் பணிகளைத் தொடங்கியுள்ளோம். பணிகள் தாமதமாக நடைபெறுவதாக புகார்கள் வருவதால், விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறை அனுமதி கிடைக்காததால் இரவில் மட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என்று அவர் கூறினார்.
English Summary : Rs 450 crore was allocated to renovate roads in Chennai due to Global Investors Conference on September.