சி.பி.எஸ்.இ சார்பில் கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு உச்ச நீதிமன்றத்தால் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கு பதில் மறு தேர்வை 4 வாரங்களுக்குள் நடத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஎஸ்இ சார்பில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 5-ம் தேதி வெளியாக இருந்த நிலையில் ஹரியாணாவில் இந்த தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக கூறி இத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று மாணவர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை கடந்த சில தினங்களுக்கு முன்னர் விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், வினாத்தாள் கசிந்த விஷயத்தில் எத்தனை பேர் பயனடைந்தார்கள் என அறிக்கை அளிக்கும்படி ஹரியாணா போலீஸாருக்கு உத்தரவிட்டது. மேலும் சட்ட விரோதமாக ஒரேயொரு மாணவர் பயனடைந்தாலும் தேர்வின் தரத்தை சீரழிக்கும் என்றும் கூறிய நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், அமிதாபா ஆகியோர் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மருத்துவ நுழைவுத் தேர்வின் புனிதத்தை நாங்கள் தியாகம் செய்ய முடியாது என்று கூறினர். மேலும் இந்த தேர்வை மீண்டும் நடத்துவதா என்பது குறித்து வரும் 15ஆம் தேதி நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும் அதுவரை நுழைவுத் தேர்வு முடிவை சிபிஎஸ்இ வெளியிடக்கூடாது” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், “சிபிஎஸ்இ சார்பில் கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை இந்த நீதிமன்றம் ரத்து செய்கிறது என்றும் சிபிஎஸ்இ 4 வாரங்களுக்குள் மறு தேர்வை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது” என்றும் தெரிவித்தனர்.

English Summary : The Supreme Court has cancelled the All India Pre-Medical Entrance Test (AIPMT) after the paper was leaked.