actor-election-001
நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் 18ஆம் தேதி தேர்தல் ஆணையர் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மனாபன் அவர்கள் மேற்பார்வையில் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 18ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முறை தவறி நடக்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர்கள் வாக்குச்சாவடி வளாகத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையர் ஐந்து பேர்களுக்கு மிகாமல் பார்வையாளர்களை நியமித்து கொள்ளலாம் என்றும், அவர்கள் நடிகர் சங்கத்தை சாராத தனி நபர்களாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வெளியூரில் இருக்கும் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக தபால் மூலம் வாக்குச்சீட்டுக்கள் அனுப்பப்பட்டு, வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அனுப்ப தொடங்கியுள்ளதாகவும், மொத்தம் 1,175 தபால் வாக்குச்சீட்டுக்கள் அனுப்பியுள்ள நிலையில், 12 வாக்குச்சீட்டுக்கள் முகவரியில் ஆள் இல்லை என்று திரும்பி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாண்டவர் அணியினர் என்று கூறப்படும் விஷால் அணியினர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அவர்களை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்த மனுவில் தேர்தல் அன்று விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கவும், வாக்களிக்க வரும் மூத்த உறுப்பினர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டியும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தபால் ஓட்டுக்கள் வரத்தொடங்கிவிட்டதால் தபால் ஓட்டுக்களை சேகரித்து வைக்கப்படும் பெட்டிக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஷால் கூறியபோது, ‘தேர்தலுக்காக ஏற்கனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளது. எனினும் தேர்தல் நாளில் மூத்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் வாக்களிக்க வரவிருப்பதால், விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடைபெறாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு கேட்கவே இன்று போலீசில் புகார் மனு அளிக்க வந்துள்ளோம் என்றார்”.
English summary – Rules & regulations announced for upcoming south indian actors election