சென்னையில் கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆரம்பித்த வைத்த கோயம்பேடு முதல் ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து பொதுமக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மெட்ரோ ரெயில் நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது பற்றி டி.ஜி.பி. அசோக்குமார், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் சமீபத்தில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து நேரடியாக ஆய்வு செய்தனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடக்கும் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னை போலீஸ் கமிஷனரின் கட்டுப்பாட்டில் செயல்படும் மெட்ரோ ரெயில் போலீஸ் நிலையங்கள் தனியாக அமைக்கப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் 6 அல்லது 7 மெட்ரோ ரெயில் போலீஸ் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும், இந்த போலீஸ் நிலையங்களுக்கு தனி இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் உதவி கமிஷனர்கள், ஒரு துணை கமிஷனர் என மொத்தம் 500 பேர் தனியாக நியமிக்கப்படுவார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த 500 போலீஸார்களுக்கும் தீவிரவாதிகளை எதிர்கொள்ளுதல், நாசகார சக்திகளை அடக்குதல், ரெயில் தண்டவாள பாதுகாப்பு போன்ற பயிற்சிகள் கொடுக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இவர்களுக்கு நவீன ரக துப்பாக்கிகளும் வழங்கவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நியமனங்கள் அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் முறையாக செயல்படுத்தப்படும் என தெரிகிறது.
மெட்ரோ ரெயில் நிலையங்களின் பாதுகாப்பு பணியை தற்போது சென்னை நகர போலீசாரும், தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களின் காவலாளிகளும் இணைந்து செய்கிறார்கள். மெட்ரோ ரெயில் நிலைய போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றும், பாதாள ரெயில் நிலையங்களில் பணியாற்ற விசேஷ பயிற்சி கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary : Separate police stations has been set for Metro train stations.