சிங்கப்பூரின் பிரபல கல்வி நிறுவனமான ‘மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிட்டியூட் ஆப் சிங்கப்பூர்’ சென்னையில் கேம்பஸ் ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதற்காக, சென்னை வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பப் பயிலகத்துடன் இந்நிறுவனம் சமீபத்தில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மற்றும் தாஷ்கென்ட் நகரங்களில் இதுபோன்ற கேம்பஸ்களை அமைத்துள்ள இந்நிறுவனம் சென்னையில் சுமார் 46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 70 ஆயிரம் சதுரடி கொண்ட கேம்பஸ் வளாகத்தை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் நிறைவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ‘மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிட்டியூட் ஆப் சிங்கப்பூர்’ பயிலகத்தின் தலைமைச் செயலாளர் டாக்டர் ஆர். தெய்வேந்திரன் அவர்கள் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியபோது, “ஆசியாவில் மட்டுமின்றி, உலகளவிய அளவில் சிங்கப்பூர் கல்விமுறைக்கு நல்ல வரவேற்பும், மதிப்பும் உள்ளதால், உலகின் பல நாடுகளில் இருந்தும் ‘மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிட்டியூட் ஆப் சிங்கப்பூர்’ பயிலகத்தில் சேர்ந்து படிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

அவர்களின் ஆர்வத்தை நிறைவேற்றும் வகையில் ஏற்கனவே, மலேசியா மற்றும் தாஷ்கென்ட் நகரங்களில் இதுபோன்ற கேம்பஸ்களை தொடங்கினோம். இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து, அவை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதனை அடுத்து சென்னையில் மூன்றாவது கேம்பஸை நிறுவ ஏற்பாடு செய்துள்ளோம் என்று டாக்டர் ஆர். தெய்வேந்திரன் கூறியுள்ளார். இந்த கேம்பஸ் சென்னை மாணவர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : Management Development Institute of Singapore campus will start in Chennai.