சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பணிகள் நடைபெற்று வரும் இரண்டு வழித்தடங்கள் தவிர மேலும் மூன்று வழித்தடங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் பாதையின் பணிகள் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை ஒரு வழித்தடமும், சென்ட்ரலில் இருந்து தோமையார் மலை வரை இன்னொரு வழித்தடமும் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மொத்த தூரம் 45 கிலோ மீட்டர். இந்த இடங்களில் சுரங்கப்பாதை மற்றும் தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது தவிர 2வது கட்டமாக சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை விரிவாக்கம் செய்ய தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விரிவாக்க திட்டத்தின் படி, மேலும் புதிதாக 3 வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன.

1. மாதவரத்தில் இருந்து பெரம்பூர், அயனாவரம், புரசைவாக்கம், கீழ்பாக்கம் ஆஸ்பத்திரி, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ஜெமினி பாலம், ராதா கிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர் வழியாக கலங்கரை விளக்கம் வரை 17 கி.மீ. தூரம் வரை ஒரு வழித்தடம் அமைக்கப்படுகிறது.

2. மாதவரத்தில் இருந்து கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர் மேற்கு, முகப்பேர், வளசரவாக்கம், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, மேடவாக்கம், பெரும்பாக்கம் வரை 32 கி.மீ. வரையிலான 2வது வழித்தடம் உருவாக உள்ளது.

3. கோயம்பேடு, சாலிகிராமம், வடபழனி, கோடம்பாக்கம், பனகல்பூங்கா, நந்தனம், லஸ், மந்தைவெளி, அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம் வழியாக ஈஞ்சம்பாக்கம் வரை 3வது வழித்தடம் அமைக்கப்படவுள்ளது. இந்த 3வது வழித்தடத்தை 27 கி.மீ. தூரம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை அமைப்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இந்த ஆய்வை நடத்தும் நிறுவனம் டெண்டர் விட்டு முடிவு செய்யப்படுகிறது.

இந்த பாதையில் மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கப்பட்டால், கட்டிடங்களுக்கு பாதிப்பு வருமா? சுரங்க ரெயில் நிலையங்களை எங்கு அமைப்பது? நிலம் கையகப்படுத்த வேண்டியது வருமா? எவ்வளவு பயணிகள் பயன் பெறுவார்கள்? எத்தனை ரெயில்கள் விட வேண்டும்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் ஆய்வு நடைபெறும்.

6 மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அளிக்கப்படும். அதன் பிறகு இந்த புதிய வழித்தடங்கள் அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English Summary : Tender soon for 3 new Metro lines in Chennai after Koyambedu and Alandur route.