இந்தியா முழுவதும் பல கிளைகளை கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வரும் சிட்டி யூனியன் வங்கியின் 500-வது கிளையை அரியலூர் மாவட்டம் சிந்தாமணி என்ற கிராமத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து சிட்டி யூனியன் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
சிட்டி யூனியன் வங்கி தனது 500-வது கிளையை அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த சிந்தாமணி கிராமத்தில் சமீபத்தில் திறந்துள்ளது. காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதிய கிளையை தொடங்கிவைத்தார்.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் காஞ்சி சங்கராச்சாரியர் பேசியபோது, “நல்ல எண்ணங்கள், ஆன்மிக ஈடுபாடு இருந்தால் இறைவன் வாழ்க்கையை செம்மையாக்குவான். சிட்டி யூனியன் வங்கி அரிய சேவைகளையும், பல்வேறு சமுதாய அறப்பணிகளையும் செய்து வருகிறது. வாடிக்கையாளர்கள் சிரமப்படாத வகையில் நிறைவான சேவையை வழங்குவதால், மக்களிடம் நல்ல வரவேற்பையும் ஆதரவையும் பெற்றுள்ளது, என்று கூறினார்.
முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த விஜயேந்திரரை வங்கியின் நிர்வாக இயக்குநர் முனைவர் காமகோடி, பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு செய்தார்.
வங்கியின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன், இயக்குநர்கள் ஆர்.மோகன், டி.கே.ராம்குமார், முன்னாள் இயக்குநர் கே.சம்பத், முதுநிலை பொது மேலாளர் ஆர்.வெங்கட சுப்ரமணியன், பொது மேலாளர்கள் கே.பி.ஸ்ரீதர், வி.ரமேஷ், கே.மகா ராஜன், முதன்மை திட்ட அதிகாரி எஸ்.பாலசுப்ரமணியன், சிந்தாமணி கிளை மேலாளர் ரமேஷ், தேவனாஞ்சேரி கிளை மேலாளர் ஜெயக்குமார், அலுவலர் ஊழியர் சங்க நிர்வாகிகள், வங்கியின் பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் தா.பழூர் சிந்தாமணி கிராமத்தினர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தற்போது 500 கிளைகள், 1,313 ஏடிஎம்களுடன் செயல்பட்டுவரும் சிட்டி யூனியன் வங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 25 கிளைகள் தொடங்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: Shankaracharya who opened the 500th branch of City Union Bank.