electionbooth2316தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியாகலாம் என்ற நிலையில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் அலுவலகம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் ஏற்படுவதை முற்றிலும் தடுக்கும் வகையில் வாக்குப் பதிவை கண்காணிக்க 28 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் வெப்கேமரா, 10 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் வீடியோ பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதி காரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, கடந்த 15-ம் தேதி தொடங்கிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நேற்றுடன் முடிந்துவிட்டதாக கூறிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மேலும் கூறியதாவது:

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில், 6 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றனர். இதற்கானப் பணிகள் நடந்து வருகின்றன. திமுகவை பொறுத்தவரை ஏற்கெனவே 51 தொகுதிகளில் இறந்தவர்கள், இரட்டை பதிவுகள் தொடர்பான பட்டியலை அளித்தனர். அதில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 652 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 472 பேர் இடம் மாறிச் சென்றவர்கள்; 37 ஆயிரத்து 241 பெயர்கள் இரட்டை பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, மதுரை மத்தி ஆகிய தொகுதிகளில் இறப்பு, இரட்டை பதிவுகள் உள்ளிட்ட விவரங்களை அளித்துள்ளனர். இதையும் தற்போது ஆய்வு செய்து வருகிறோம்.

ஏற்கெனவே, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, நீக்க மனு அளித்துள்ளனர். அந்த மனுக்கள் மீது வீடு வீடாக சென்று களஆய்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 15 நாட்களில் இப்பணிகள் முடிக்கப்படும்.

இதில், 29 வயதுக்கு மேற்பட்டவர்கள் புதிதாக சேர்க்க மனு அளித்திருந்தால், முந்தைய முகவரி விவரங்கள் சரிபார்த்த பின்னரே பெயர் சேர்க்கப்படும். கல்லூரிகளில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாமில், 35 ஆயிரம் பேர் பெயர் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்தலை பொறுத்தவரை, தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முழுமையாக வந்து சேர்ந்துவிட்டன. அவற்றை ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. வாக்குப் பதிவின் போது 28 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் வெப்கேமரா வைக்கப்படும். 10 ஆயிரம் சாவடிகளில் வாக்குப் பதிவு வீடியோ பதிவு செய்யப்படும். இதன் மூலம், 50 சதவீதத்துக்கும் மேலான வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்படுகிறது என்று ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

English Summary: 10 thousand polling booths in the state of the webcam. Election official information.