திருட்டு விசிடியை ஒழிக்க திரைப்பட தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் பலவிதமான வழிகளை கையாண்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தியேட்டர் உரிமையாளர் புதுமையான வழிமுறை ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதன்மூலம் திருட்டு விசிடியை பெருமளவு கட்டுப்படுத்தலாம் என்பது அவரது நம்பிக்கையாக உள்ளது.
இந்த புதிய திட்டத்தை தூத்துக்குடி சண்முகா தியேட்டர் நிர்வாகம் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளது. இதன்படி ரூ.1000 கொடுத்து ஒருமுறை டிக்கெட்டை பெற்றுக்கொண்டால், அந்த ஆண்டு முழுவதும் அந்த தியேட்டரில் வெளியாகும் அனைத்து படங்களையும் ஒருமுறை பார்த்து ரசிக்கலாம். டிக்கெட் பெற்றவர் பார்க்க முடியாத சூழ்நிலையில் அவர் வேறு யாருக்காவது தனது டிக்கெட்டையும் கொடுத்து படம் பார்க்க அனுமதிக்கலாம்.
இந்த திட்டம் அப்பகுதி திரைப்பட ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும், இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுக்கள் விற்பனை ஆகியுள்ளதாகவும், மொத்தம் பத்தாயிரம் டிக்கெட்டுக்கள் வரை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாகவும் தியேட்டர் நிர்வாகம் கூறியுள்ளது. இந்த புதிய திட்டம் வரும் ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் திருட்டு டிவிடியை பெருமளவு கட்டுப்படுத்தி ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கலாம் என்பதால் தமிழகத்தின் அனைத்து தியேட்டர்களும் இம்முறையை பின்பற்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
English Summary : A theater owner in Tuticorin district announced a new plan as a person who buy a Rs.1000 ticket can watch all films released in that theater for 1 year.