வரும் நவம்பர் மாதம் 10ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதை அடுத்து சென்னையில் உள்ளவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து சுமார் 20 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
கடந்த ரயில்வே பட்ஜெட்டில் ரயில் களில் டிக்கெட்களை முன் முன்பதிவு செய்யும் காலம் 60 நாட்களிலிருந்து 120 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், 120 நாட்களுக்கு முன்பே விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி தற்போது ஏற்பட்டுள்ளது.
இதனால் தென் மாவட்டங் களுக்கு வழக்கமாக இயக்கப்படும் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது. மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்ய முயன்று ஏமாற்றம் அடைந்தனர். எனவே தெற்கு ரயில்வே அறிவிக்க இருக்கும் சிறப்பு ரயில் குறித்த எதிர்பார்ப்புடன் பலர் உள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் இருந்து கோவை, நெல்லை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குவது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளால் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் 10 நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியபோது ‘‘தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு இடங்களுக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டில் சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து 20க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கலாம்’’ என்று கூறினார்.
English Summary: Southern Railway to Run a Special Train on Account of Diwali Festival.