ஜப்பானில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு கல்வி உதவித்தொகையுடன் கூடிய வாய்ப்பு அளிக்கவுள்ளதாகவும், இந்த அரிய வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஜப்பான் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
ஜப்பானில் சிறப்பு பயிற்சிக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிப் படிப்பு மற்றும் பல்கலைக்கழக இளநிலை கல்வி கற்க உலகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஜப்பான் அரசு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. அனைத்து படிப்புகளிலும் ஓராண்டு காலம் ஜப்பானிய மொழி பயில வேண்டும் .
3 ஆண்டுகால சிறப்பு பயிற்சியில் தொழில்நுட்பம், வர்த்தகம், ஆடை வடிவமைப்பு போன்ற துறைகளில் சான்றிதழ் வழங்கப்படும். 4 ஆண்டுகால தொழில்நுட்ப படிப்பில் பொறியியல் சார்ந்த துறைகளில் சான்றிதழ் வழங்கப்படும். பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பில் சமூக அறிவியல் மற்றும் மானுடவியல், இயற்கை அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சான்றிதழ் வழங்கப்படும்.
விண்ணப்பதார்களுக்கு தேவையான தகுதி: விண்ணப்பதாரர்கள் 1994 ஏப்ரல் 2-ம் தேதிக்கு பிறகும், 1999 ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பும் பிறந்திருக்க வேண்டும். பிளஸ் 2 முடித்தவர்கள் மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகால பட்டப் படிப்பையும் பிளஸ் 1 முடித்தவர்கள் நான்கு ஆண்டுகால படிப்பையும் மேற்கொள்ளலாம்.
கல்வி உதவித்தொகை பெற 12/1, செனடாப் சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18 என்ற முகவரியில் உள்ள ஜப்பான் தூதரக வளாகத்தில் நடைபெறும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை எழுத ஜப்பானிய மொழி தெரிந்திருக்க அவசியம் இல்லை. தேர்வு நாள், நேரம் பின்னர் தெரிவிக்கப்படும். இறுதி முடிவு 2016 பிப்ரவரி மாதத்துக்குள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
ஜப்பான் தூதரக வளாகத்தில் இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தூதரகத்தில் ஜூன் 17ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-24323860/63 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary: Study in Japan With Scholarships, Japan Consulate.