சமீபத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆலோசனை நடத்த சென்னை மேயர் சைதை துரைச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று ரிப்பன் கட்டடத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சியின் 32 மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் இந்த ஆண்டு குறைந்துள்ளது. இதனால் மாநகராட்சி கல்வித் துறை மீது எதிர்க்கட்சிகள் குறை கூறி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் நோக்கில் தேர்ச்சி விகிதம் குறைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ள சூழ்நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறையில் உள்ள குறைபாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதோடு, இனி வரும் ஆண்டுகளில் கற்பிக்கும் முறையில் மாற்றம் செய்து தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மேயர், தலைமை ஆசிரியர்களுடன் விவாதித்தார்.

கடந்த ஆண்டு படித்த மாணவர்களுக்கு பழைய வினாத்தாள்களில் கேள்விகளை படிக்கவே அதிகம் ஊக்குவிக்கப்பட்டது. அதனால் பலர் தேர்ச்சி பெற முடியவில்லை. வரும் கல்வி ஆண்டில் வினா வங்கிகள் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகின்றனர்.

English Summary: To Increase Pass Percentage in +2 and SSLC Chennai Mayor Saidai.Duraisamy consulting with Chennai Corporation Schools Headmasters to remove the defects for the students to get more marks and the failed students to pass.