இரண்டு சக்கர வாகனங்களைப் பழுது நீக்குவோர் சங்கத்தினர் சென்னையில் இன்று பல்வேறு கோரிக்கைகலை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து இரு சக்கர வாகனப் பழுது நீக்குவோர் சங்கத்தின் தலைவர் வி.கே.ஆர். வடிவேலன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய வாகன மசோதாவில் பல நன்மை தரும் விஷயங்கள் இருந்தாலும், வாகனங்கள் பழுது ஏற்பட்டால், உரிய நிறுவனங்களில் மட்டுமே பழுதுநீக்க வேண்டும், அதன் உதிரிபாகங்களை உரிய நிறுவனக் கடைகளில் மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற நடைமுறைக்கு மாறான அம்சங்கள் உள்ளன.

இந்த விதிமுறையால் கோடிக்கணக்கான இரண்டு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் தொழிலாளர்கள், உதிரிபாகங்கள் விற்பனை செய்வோர், சிறிய அளவில் சுய தொழிலில் ஈடுபட்டுள்ளோர் ஆகியோர் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே, இந்த மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று சென்னை சேப்பாக்கத்தில், எங்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம்.

இந்தப் போராட்டத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள், இரண்டு சக்கர வாகனம் பழுது நீக்குவோர் உள்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்’ என்று வடிவேலன் தெரிவித்துள்ளார்.

English Summary: Two Wheeler Mechanics goes Hunger Strike Today emphasizing their request against the New Vehicle Act, by Central Government.