சமீப காலமாக தொடர்ந்து குறைக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. அதன்படி சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் நமது நாட்டின் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
மாதந்தோறும் 1 மற்றும் 16–ந்தேதிகளில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் வரும் 16-ம்தேதி பெட்ரோல், டீசலின் விலை கணிசமாக குறைக்கப்படும் என யூகங்கள் நிலவி வந்தன.
இந்நிலையில், ஒரு நாள் முன்னதாகவே திருத்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ளன. டெல்லி நிலவரப்படி பெட்ரோலின் விலை லிட்டர் ஒன்றுக்கு 82 பைசாவும், டீசலின் விலை 61 பைசாவும் உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையை பொருத்தவரை இன்றுவரை ரூ.58.88-க்கு விற்பனையான பெட்ரோல் நள்ளிரவு முதல் ரூ.59.70-க்கும், ரூ.48.91-க்கு விற்பனையாகி வரும் டீசல் இன்று நள்ளிரவு முதல் ரூ.49.52-க்கும் விற்பனையாகும்.