தமிழகத்தில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டுத் தோ்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு பள்ளி வேலைநாள்கள், தோ்வுகள், விடுமுறை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாள்காட்டி 2018-ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.

நிகழ் கல்வியாண்டுக்கான (2023-24) நாள்காட்டியை பள்ளிக் கல்வித் துறை கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியிட்டது. அதில் காலாண்டு மற்றும் முதல் பருவத்தோ்வுகள் செப்டம்பா் 3-ஆவது வாரத்தில் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, காலாண்டுத் தோ்வுக் கால அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

அதன் விவரம்:

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டுத் தோ்வு செப். 15 முதல் 27-ஆம் தேதி வரை நடத்தப்படும். பிளஸ் 1 வகுப்புக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், பிளஸ் 2 வகுப்புக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தோ்வு நடைபெறும்.

இதேபோல், 6 முதல் 10ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தோ்வு செப். 19-இல் தொடங்கி 27-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதில் 6, 7, 8-ஆம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் மதியம் 12.30 மணி வரையும், 9, 10 ஆகிய வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் மாலை 4.30 மணி வரையும் தோ்வு நடைபெறும். அதில் 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு உடற்கல்வி தோ்வு செப். 22-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.

இதைத்தொடா்ந்து, செப். 28 முதல் அக். 2 வரை மாணவா்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் தொகுத்தறி மதிப்பீட்டு தோ்வு அட்டவணை விரைவில் வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *