பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள நல்லாட்சி திட்டத்தையொட்டி, வரி செலுத்துவோரின் குறைகளை தீர்ப்பதற்காக, ஒவ்வொரு புதன் கிழமையும் சிறப்பு கூட்டத்தைக் கூட்டும்படி, வருமான வரித் துறைக்கு, வரித்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, ‘தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா’ உள்ளிட்ட மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அரசு அலுவலகங்களில் சிறப்பாகவும், விரைவாகவும் பணிகள் நடப்பதற்காக, நல்லாட்சி திட்டத்தையும் பிரதமர் மோடி அறிவித்தார். இதன் அடிப்படையில் வருமான வரித்துறையின் தலைமைப் பிரிவான, நேரடி வரித்துறை வாரியம், நாடு முழுவதும் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்களுக்கு முக்கிய ஆணை ஒன்று பிறப்பித்துள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
* ஒவ்வொரு புதன் கிழமையும், வரி செலுத்துவோரின் குறைகளைக் கேட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க, சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
* ஒவ்வொரு வாரமும், புதன் கிழமை, காலை, 10:00 மணியிலிருந்து, பகல், 1:00 மணி வரை இதற்காக நேரம் ஒதுக்க வேண்டும்.
* குறை தீர்ப்பு நாளன்று, வருமான வரித் துறை அலுவலகங்களின் உயர் அதிகாரிகள், வரி செலுத்துவோரின் குறைகளைத் தீர்ப்பதற்கு நேரத்தைச் செலவிட வேண்டுமே தவிர, வேறு எந்த பணிகளுக்கும் நேரம் ஒதுக்கக் கூடாது.