நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு ரசாயன பொருட்கள் கலந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இந்தியாவின் பல மாநிலங்கள் இந்த உணவுப்பொருளுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளுக்கு தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேகி நூடுல்ஸ் மட்டுமின்றி ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன் ட் நூடுல்ஸ், ஸ்மித் அண்ட் ஜோன்ஸ் சிக்கன் மசாலா ஆகிய நூடுல்ஸ் உணவுப்பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ் உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு தற்போது இந்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளது. இந்த ஆய்வின்படி மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளில் காரீயத்தின் அளவு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 லட்சத்திற்கு 2.5 அதாவது 2.5 parts per million (PPM) என்ற அளவை விட அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ், வே வே எக்ஸ்பிரஸ் நூடுல்ஸ், ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன் ட் நூடுல்ஸ், ஸ்மித் அண்ட் ஜோன்ஸ் சிக்கன் மசாலா ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட காரீயத்தின் அளவு அதிகமாக இருப்பதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி மேற்சொன்ன நூடுல்ஸ் உற்பத்தி நிறுவனங்களின் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006, பிரிவு 30(2)(a) – ன் கீழ் இந்நிறுவனங்கள் நூடுல்ஸ் உணவுப் பொருட்களை தமிழ்நாட்டில் தயாரிப்பதற்கும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் முதற்கட்டமாக மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்து, உணவுப் பாதுகாப்பு ஆணையர் ஆணையிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும், இவ்வகை உணவுப் பொருட்களை விற்பனையிலிருந்து உடனடியாக திரும்பப் பெறுவதற்கும் இந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றும் தமிழக அரசின் செய்தி – மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
English Summary : 2 Noodles company is temporarily banned in TamilNadu.