kambanசென்னையில் ஒவ்வொரு வருடமும் கம்பன் விழா கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 40 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கம்பன் விழா 41வது ஆண்டாக வரும் வெள்ளிக்கிழமை அதாவது ஆகஸ்ட் 14 முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக சென்னை கம்பன் கழகத் தலைவர் இராம.வீரப்பன் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

சென்னை கம்பன் கழகத்தின் 41-ஆவது ஆண்டு கம்பன் விழா மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி, மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டு குஜராத் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பு.இரா.கோகுலகிருஷ்ணன் நிறுவிய ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் கம்பர் விருது இரா.ருக்மணிக்கும், கே.சுவாமிநாதன் நினைவுப் பரிசு நிர்மலா மோகனுக்கும், நீதிபதி மு.மு.இஸ்மாயில் நினைவுப் பரிசு பாரதிதாசனின் மகன் கவிஞர் மன்னர்மன்னனுக்கும், கம்பர் பற்றிய சிறந்த நூலுக்கான அ.ச.ஞா. நினைவுப் பரிசு எம்.எஸ்.ஸ்ரீலட்சுமிக்கும் வழங்கப்பட உள்ளன.

மேலும், கலை, இலக்கியத் துறைகளில் புகழ்பெற்று விளங்கும் 14 பேர்களுக்கும், மாநில அளவிலான இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

தொடக்க நாளன்று, இரெ.சண்முகவடிவேல் எழுதிய “கம்பனின் சுவைநுகர் கனிகள்’ எனும் ஏவி.எம்.அறக்கட்டளைச் சொற்பொழிவு நூலும், கம்பன் கழகமும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சும் இணைந்து நடத்திய “மூலக்கதையில் முளைத்த கதைகள்’ சிற்றிலக்கியச் சுற்றுலா தொடர் சொற்பொழிவு ஒலிப்பேழையும் வெளியிடப்படுகின்றன. இவற்றை முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன், அவ்வை நடராசன் ஆகியோர் வெளியிடுகின்றனர். விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன், “கம்பனில் ஏழாம் எண்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

விழா இறுதி நாளில்,”போர்க்களத்தில் தம் இணையற்ற செயல்களால் பெரிதும் கவருவோர்’ என்ற தலைப்பில் பட்டிமண்டபம் நடைபெறுகிறது. இதற்கு நடுவராக இலங்கை ஜெயராஜ் இருப்பார். புலவர் கோ.சாரங்கபாணி, “துஞ்சலில் நயனத்தன்’ என்ற தலைப்பிலான உரையும், கவிஞர் அப்துல்காதர் தலைமையில் “கேளாமல் போன கேள்விகள்’ என்ற தலைப்பில் நான்கு கவிஞர்கள் பங்கு பெறும் கவியரங்கமும் நடைபெற உள்ளன என்றார்.

English Summary:The agenda of the 41th Festivel of chennai kamban.