கடந்த 376 ஆண்டுகளாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் சென்னை தின கொண்டாட்டம் இவ்வாண்டும் மிகச் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே நேற்று பார்த்தோம். இந்நிலையில் சென்னை தினத்தை முன்னிட்டு, முருகப்பா குழுமம் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்த குழுமம் கடந்த நான்கு ஆண்டுகளாக போட்டிகளை நடத்தி வரும் நிலையில் ஐந்தாவது ஆண்டாக இந்த ஆண்டும் நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து முருகப்பா குழுமம் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்று கூறுவதாவது: வருகிற 22-ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, “முருகப்பா மெட்ராஸ் கோஷண்ட்’ வினாடி வினா போட்டி வருகிற 22-ஆம் தேதி சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
இதில், சென்னை வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் பங்கு பெறலாம். போட்டியில் கலந்துகொள்ள பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி ஆகும்.

சென்னை “குவிஸ் பவுண்டேஷன்’ அமைப்புடன் இணைந்து நடத்தும் “மெட்ராஸ் குவிஸ்’ போட்டியும் இந்த ஆண்டு நடத்தப்படவுள்ளது. இந்தப் போட்டியில் வயது வரம்பின்றி அனைவரும் கலந்துகொள்ளலாம். இந்தப் போட்டி வருகிற 23-இல் நடைபெறவுள்ளது. போட்டி நடைபெறும் இடம் விரைவில் அறிவிக்கப்படும். இந்த போட்டிகள் குறித்து மேலும் தகவல்களுக்கு www.murugappa.com என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

“மெட்ராஸ் சாங்’ போட்டி: கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை நகரின் பெருமைகளைப் போற்றும் வகையில் முருகப்பா “மெட்ராஸ் சாங்’ என்ற பெயரில் பாட்டு ஒன்று வெளியிடப்பட்டது. இதே பாடலை சொந்த மெட்டு, வார்த்தைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட சில மாற்றங்களைச் செய்து பாட வேண்டும். இந்தப் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 12 ஆகும். மேலும் தகவல் பெற www.murugappamadrassong.com என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

English Summary : Murugappa Group School students has arranged various games for “Chennai Day” competitions. Details required to take part in “Chennai Day” will be provided in the website.