சென்னை ஐ.சி.எஃப். பகுதியில் செயல்பட்டு வரும் ஆதார் அட்டை பதிவு மையத்தில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க நேற்று ஒரே நாளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆதார் அட்டைக்கு பதிவு செய்ய வந்ததால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இந்த மையத்தில் போதிய போலீஸ் பாதுகாப்பும் இல்லாததால் பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருசிலர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஆதார் அட்டைக்கு பதிவு செய்யவும், புகைப்படம் எடுக்கவும் நேற்று காலை அயனாவரம், அண்ணாநகர், கொளத்தூர், பெரம்பூர், கொரட்டூர், வில்லிவாக்கம், சேத்துப்பட்டு, சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று ஒரே நாளில் ஆதார் மையத்தில் குவிந்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மையத்தின் கேட்டை பூட்டி, கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்தனர்.

ஆனால் இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். இந்த இடிபாடுகளில் சிக்கி பெண்கள் மற்றும் முதியோர்கள் சிலர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து ஆதார் பதிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.குணா அவர்கள் கூறியபோது, ‘வழக்கமாக இந்த மையத்தில் தினமும் 1000 முதல் 1500 பேர் வரைதான் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க வருவார்கள் என்றும் ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை எதிர்பாராத வகையில் மூவாயிரமாக அதிகரித்தது என்றும், இந்த பிரச்சனையை இனிவரும் நாட்களில் தவிர்க்க இந்த மையத்தில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க, புகைப்படம் எடுத்து விவரங்களைப் பதியும் பதிவாளர்களின் எண்ணிக்கை 12-லிருந்து 15-ஆக ஏப்ரல் 7 முதல் அதிகரிக்கப்படும் என்றும் அதேபோல, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் விவரங்களைச் சேர்ப்பதற்கு தற்போதுள்ள 5 பதிவாளர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.

English Summary : The crowd in the center of Aadhar registration