தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 104 தொலைபேசி சேவை கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. பொதுமக்கள் இந்தச் சேவையைத் தொடர்பு கொண்டு மருத்துவம் தொடர்பான ஆலோசனைகள், விவரங்கள், உளவியல் ஆலோசனைகளைப் பெற்று வரும் நிலையில் இதே எண்ணில் தொடர்பு கொண்டு மூத்த குடிமக்களுக்குத் தேவையான மருத்துவ, உளவியல் ஆலோசனைகளையும் தற்போது பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
104 சேவையின் மற்றொரு பகுதியாக மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த சேவை வரும் ஜூலை 3 வெள்ளிக்கிழமை முதல் தொடங்க உள்ளதாகவும், 104 தொலைபேசி சேவையை நடத்தி வரும் ஜிவிகே இஎம்ஆர்ஐ அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஏதேனும் ஆலோசனைகள் தேவைப்பட்டால் 104 என்ற எண்ணை அழைக்கலாம். இதில், முதியோருக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகள், உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும். இதற்காக 104 சேவை ஊழியர்களுக்கு முதியோர் மருத்துவ நிபுணர்கள் மூலம் ஆலோசனைகளும், பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
மேலும் முதியோர்களுக்கு அவர்களது குடும்பத்தினர்களாலும் மற்றவர்களாலும் வீடுகளில் ஏதாவது துன்புறுத்தல், கொடுமைப்படுத்துதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்றாலும் உடனடியாக 104 தொலைபேசி சேவைக்கு தகவல் அளிக்கலாம். இது தொடர்பாக காவல் துறையினரின் உதவியோடு அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும். மேலும், உறவினர்களால் கைவிடப்பட்ட முதியோர்கள், தெருவோரங்களில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் முதியோர் குறித்து 104-க்கு தகவல் அளிக்கலாம். அவ்வாறு கைவிடப்பட்ட முதியோர்கள் குறித்த தகவல் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும். தொண்டு நிறுவனங்களின் உதவியோடு முதியோருக்கான காப்பகங்களுக்கு அவர்களை கொண்டு செல்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary:The old peoples Horrible? call 104 immediately.