பள்ளிக்கு செல்லும் வயதில் பள்ளிக்கு செல்லாமல் வேலைக்குச் செல்லும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு தேவையான கல்வியை அளித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மத்திய அரசின் நிதியுதவியுடன் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி தமிழகத்தில் சென்னை, கோவை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகர்கோவில், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் பள்ளி செல்லாக் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைத் தொழிலாளர்கள் கணக்கெடுப்புப் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தென்மாவட்டங்களில் தீப்பெட்டி, பட்டாசு ஆலைகள், செங்கல் சூளைகள், கடைகள், ஆலைகள் ஆகிய இடங்களில் பணிபுரியும் 9 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். சிறப்புப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்பட்டு, பின்னர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து கல்வி பயில வழிவகை செய்யப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் செயல்பட்டு வரும் 15 மாவட்டங்களிலும் பள்ளி செல்லாக் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைத் தொழிலாளர்களைக் கண்டறிய கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மத்திய அரசு மூலம் சுமார் ரூ.15 லட்சம் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள், களப்பணியாளர்கள், அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் என சுமார் 400 பேர் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: The survey of children not attending school started in 15 districts,including Chennai