12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பொறியியல் விண்ணப்பங்கள் கடந்த 15ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்பு படிக்க விண்ணப்பங்கள் மே மாதம் 9ஆம் தேதி முதல் வினியோகம் செய்யப்படும் என்று மருத்துவ கல்வி இயக்குனர் விமலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் விமலா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 265 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத அகில இந்தி ஒதுக்கீட்டு இடங்கள் போக மீதம் 2257 சீட்டுகள் இருக்கின்றன. 8 தனியார் மருத்துவ கல்லூரிகள் மூலம் 595 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசுக்கு கிடைக்கின்றன. கே.கே.நகர் ஈ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகள் உள்ள 100 இடங்களில் 65 இடங்கள் அரசு ஒதுக்கீடாகும். ஆக மொத்தம் 2917 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

இது போல சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியில் உள்ள 100 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு 15 போக 85 இடங்களும், 17 தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 970 இவற்றை சேர்த்து மொத்தம் 1055 இடங்கள் இருக்கின்றன. எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர மே 9ஆம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுகிறது.

மே 26ஆம் தேதி மாலை 5 மணி வரை படிவம் வழங்கப்படும். ரூ. 500க்கான டி.டி. செலுத்தி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். www.tnhealth.org மருத்துவ வெப் சைட்டிலும் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்யலாம். மே 27ஆம் தேதி மாலை 5 மணிவரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் அவற்றை ஆய்வு செய்து ஜூன் 15ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதனை தொடர்ந்து முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் மாதமும் 2வது கட்ட கலந்தாய்வு ஆகஸ்டு மாதமும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விமலா கூறினார்.
English Summary: Medical Courses Applications Starts on May 9, Director of Medical Education