தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் வாக்குப்பதிவிற்காக ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் 15 பேர் வரை போட்டியிடும் தொகுதிகளில் ஒரு வாக்குப்பதிவு இயந்திரமும், 16 முதல் 30 வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் இரண்டு வாக்குப் பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் 18 சின்னங்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும். 17 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுக்குரிய சின்னம் ஆகியவை பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 90 தொகுதிகளில் 2 இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 30 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா தொகுதியான ஆர்.கே.நகர், அரவக்குறிச்சி மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். என தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதியிலும் மொத்தம் 3,785 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி என்ற பெருமையை பெற்றிருக்கிறது முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர். இங்கு மட்டும் 45 பேர் களத்தில் உள்ளனர். இதுபோல், மிகக் குறைந்த வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளாக மயிலாடுதுறை, கூடலூர், ஆற்காடு ஆகியவை உள்ளன. இவற்றில் தலா 8 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர். பேராவூரணி, திருவையாறு, கீழ்வேலூர், வால்பாறை, உடுமலைப்பேட்டை, வானூர் ஆகிய 6 தொகுதிகளும் தலா 9 வேட்பாளர்களும், வாசுதேவ நல்லூர், காட்டுமன்னார்கோவில், பூம்புகார், பட்டுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் தலா 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
English Summary: Three Voting Machines in CM Constituency. Election Commission Announced.