அரசுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி புதிய சீர்த்திருத்தங்களை அறிவித்துள்ளது. குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகள் இனி ஒரு தேர்வுக்கு பதிலாக முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இருநிலை தேர்வுகளாக நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வெழுதும் தேர்வர்களின் மெய்த்தன்மையை உறுதி செய்ய, விதிகளை விளக்க காலை 10 மணிக்கு தேர்வு எழுத 9 மணிக்கே தேர்வு கூடங்களுக்கு வருகை தர வேண்டும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. காலை, மாலை என இரு வேளைகளிலும் தேர்விருந்தால் மாலை தேர்வு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும்.

கொள்குறிவகைத் தேர்வுகளில் அனைத்து வினாக்களுக்கும் தேர்வர்கள் விடை அளிக்க வேண்டும். விடை தெரியவில்லை எனில் கூடுதலாக கொடுக்கப்படும் E என்ற வட்டத்தை கருமையாக்க வேண்டும். எத்தனை கேள்விகளுக்கு விடைகளை நிரப்பியுள்ளனர் என்ற விவரங்களை தனியே பதிவுசெய்ய வேண்டும். விடைகளை நிரப்பிய விவரத்தை விடைத்தாளில் பதிவு செய்ய கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும். கேள்விக்கு A, B, C, D, E ஆகிய ஏதேனும் ஒன்றை குறிக்க தவறினால் விடைத்தாள் செல்லாது.

விடைத்தாளில் தேர்வரின் கையொப்பத்துக்கு பதிலாக இடது கை பெருவிரல் பதிவு செய்யப்படும். தேர்வு மையத்தில் இருந்து விடைத்தாள்கள் எடுத்துவரும் வாகனத்தில் ஜிபிஎஸ்., கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தகவல் அளித்துள்ளது. விடைத்தாள்களை கொண்டுவரும் நடவடிக்கைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படும்.

தகவல் பரிமாற்றத்தை எளிமைப்படுத்த தேர்வாணைய இணையதளத்தில் சிறப்பு தளம் விரைவில் உருவாக்கப்படும். தேர்வர்கள் தங்களுக்கு தெரியவரும் தகவல்களை தேர்வாணையத்துக்கு பகிர்ந்துகொள்ள சிறப்பு தளம் வழிவகை செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *