ricefestivalசென்னை தி.நகரில் பாரம்பரிய அரிசி உணவுத்திருவிழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல தமிழ் நடிகர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு இயற்கை உணவுகளை பார்வையிட்டனர். தமிழர்களின் பாரம்பரிய உணவு கலாசாரத்தை மீட்டெடுப்பதை மையமாக வைத்து பாரம்பரிய இந்த அரிசி உணவுத்திருவிழா, கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியுடன் நடந்தது.

இந்த விழாவுக்கு பிரபல பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் தலைமை தாங்க, நடிகர் சிவகுமார் கண்காட்சியை திறந்துவைத்தார். கண்காட்சியில் கிச்சிலி சம்பா, இலுப்பை சம்பா, வாசனை சீரக சம்பா, சேலம் சன்னா, மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, காட்டு யானம், தூய மல்லி, சிகப்பு கவுனி, குழியடிச்சான், கொட்டான் சம்பா ஆகிய நெல் மணிகளும், அவற்றின் அரிசி, சிறுதானிய உணவுகள், திணை, வரகு, குதிரைவாலி, சாமை, கம்பு, கேழ்வரகு, கோதுமை, சோளம், பனைவெல்லம் போன்றவை மனதை கவரும் வகையில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த விழாவில் நடைபெற்ற கருத்தரங்கில் ‘‘மனம் கவரும் மாடித் தோட்டம்’’ என்ற தலைப்பில் இயற்கை விஞ்ஞானி நா.நாச்சாள் அவர்கள் பேசியபோது, “நமக்கு வரும் நோய்களுக்கு நாம் உண்ணும் உணவே மூலகாரணமாக திகழ்கிறது. எனவே ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். அதிலும் தினசரி சமையலுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள், பூக்களை நாம் நம் வீட்டு மாடியிலேயே தோட்டம் அமைத்து விளைவித்து, சிக்கனமான முறையில் ஆரோக்கியமான உணவை தயார் செய்து உண்ண முடியும்” என்று கூறினார்

‘நோய்களுக்கு தீர்வாகும் பாரம்பரிய அரிசிகள்’ என்ற தலைப்பில் இயற்கை உணவு மருத்துவர் கோ.சித்தர் அவர்களும், ‘பாஸ்ட் புட் எனப்படும் பாய்சன் கலாசாரம்’ என்ற தலைப்பில் மாறன் அவர்களும், ‘பாரம்பரிய நெல்லின் தேவைகள், மறக்கடிக்கப்பட்ட அரசியலும் மறுமீள்வு போராட்டமும்’ என்ற தலைப்பில் நெல்.ஜெயராமன் அவர்களும், ‘காந்தியப் பார்வையில் விவசாயமும் இயற்கை உணவும்’ என்ற தலைப்பில் தமிழருவி மணியன் அவர்களும், ‘இயற்கை விவசாயத்தில் புரட்சிகரமான புதிய யுக்திகள்’ என்ற தலைப்பில் வேளாண் ஆராய்ச்சியாளர் டாக்டர் ராமன் அவர்களும், ‘நோய்களுக்கு காரணமான உணவுகள்’ என்ற தலைப்பில் ரத்தின சக்திவேல் அவர்களும், ‘ஆபத்தான கலப்பட உணவுகள்’ என்ற தலைப்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி மயில்சாமி அவர்களும், ‘சித்தர் நெறி உணவுமுறைகள்’ என்ற தலைப்பில் சித்த மருத்துவர் வேலாயுதம் அவர்களும் உரையாற்றினர்.

பிரபல கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சியை ஜனநாதன் தொடங்கிவைத்தார். பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டு பாரம்பரிய அரிசிகளின் கண்காட்சியை பார்வையிட்டனர்.

English Summary:Traditional Rice Food festival in Chennai.