urumeenசூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் இயக்கிய ‘கோச்சடையான்’ திரைப்படம்தான் இந்தியாவின் முதல் மோஷன் கேப்ட்சர் டெக்னாலஜியில் உருவாக்கிய திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இதே டெக்னாலஜியை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள மற்றொரு திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.

பாபிசிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் ‘உறுமீன்’ திரைப்படத்தில் முதல் ஐந்து நிமிட காட்சிகள் மோஷன் கேப்ட்சர் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் சக்திவேல் பெரியசாமி கூறியுள்ளார்.

இந்த படத்தின் கதைப்படி முதல் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு போர்க்காட்சி வருவதாகவும், இதற்காக நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் மற்றும் போர்க்களம் போன்ற செட் ஆகியவற்றுக்காக அதிக செலவு ஆகும் என்பதால் இந்த காட்சியை மட்டும் மோஷன் கேப்ட்சர் டெக்னாலஜியின் மூலம் உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார்.

கோவையை சேர்ந்த ‘ரியல் ஒர்க் ஸ்டுடியோஸ்’ என்ற அனிமேஷன் நிறுவனத்தின் 18 பேர் அடங்கிய குழு கடந்த இரண்டு மாதங்களாக இரவுபகல் பாராது இந்த போர்க்காட்சிகளை உருவாக்கியிருப்பதாகவும், வெளிநாட்டு தரத்துடன் அதே நேரத்தில் குறைந்த செலவில் இந்த நிறுவனம் தங்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணம் அனிமேஷன் காட்சிகளை முடித்து கொடுத்துள்ளதாகவும் இயக்குனர் சக்திவேல் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

பாபிசிம்ஹா, மெட்ராஸ்’ கலையரசன், ரேஷ்மி மேனன், அப்புக்குட்டி, காளி வெங்கட், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு அச்சு ராஜாமணி என்பவர் இசையமைத்துள்ளார். அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary:Urumeen director Followed Rajini’s daughter.