கண் அறுவைச் சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் “கிராஃபைன் ஃபிளிம்ஸ்’ என்ற மேம்படுத்தப்பட்ட வேதிப் பொருளைக் கண்டுபிடித்த சென்னை சவீதா பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவருக்கு பிரிட்டன் நாட்டின் பிளைமவுத் பல்கலைக்கழகம் விருது வழங்கி கௌரவித்ததுள்ளது.

சென்னை அருகேயுள்ள தண்டலம் என்ற பகுதியில் செயல்பட்டு வரும் சவீதா பொறியியல் கல்லூரியில் இ.சி.இ. என்ற பிரிவில் 4ஆம் ஆண்டு படித்து வரும் மணிகண்ட மனே என்ற மாணவர், கல்லூரியில் உள்ள எஸ்.ஏ.பி. (semester abroad program) திட்டம் மூலம் ஒரு பருவ காலத்துக்கு பிரிட்டனில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழகத்தில் படிக்கும் சிறப்பான வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. இதை அடுத்து பிரிட்டனில் அவர் கண் அறுவைச் சிகிச்சைக்கு உதவும் “இன்ட்ரா ஆக்குலர் பிரஷர் சென்சார்’ என்ற கருவியில் பயன்படுத்தக் கூடிய “கிராஃபைன் ஃபிளிம்ஸ்’ என்னும் வேதிப்பொருள் குறித்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டார்.

அப்போது, குறைந்த அளவில் மேம்படுத்தப்பட்ட கிராஃபைன் வேதிப்பொருளை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து அது தொடர்பான திட்ட அறிக்கை ஒன்றையும் அவர் தயார் செய்தார். இந்த அறிக்கையை பாராட்டி சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாணவர் மணிகண்ட மனேவுக்கு ஆராய்ச்சிக்கான விருது மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பிளைமவுத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவித் ஜென்கின்ஸ் வழங்கி கெளரவித்தார்.

விருது பெற்ற மாணவர் மணிகண்ட மனேவுக்கு சவீதா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் என்.எம்.வீரைய்யன், கல்விப் பிரிவு இயக்குநர் டாக்டர் தீபக் நல்லசாமி, சவீதா பொறியியல் கல்லூரி இயக்குநர் ரம்யா, பிளைமவுத் பல்கலைக்கழக பேராசிரியர் அதுல் மிஸ்ரா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

English Summary : Chennai Student Manikanda Mano research in usage of graphene films was succeeded during semester abroad program in UK. By honoring his invention UK University presenting Award.