அமெரிக்காவை சேர்ந்த பிரபல பத்திரிகையான டைம் பத்திரிகை ‘உலகத்தை மாற்றிய 10 பேர்’ என்ற பட்டியலை தயாரித்து அதன் முடிவை நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் சென்னையை சேர்ந்த 30 வயதான இளம் தொழில் அதிபர் உமேஷ் சச்தேவ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இது சென்னைக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவமாக கருதப்படுகிறது.
உமேஷ் சச்தேவ் தன்னுடைய கல்லூரி நண்பர் ரவி சரோகியுடன் இணைந்து சென்னை ஐ.ஐ.டி.யை தலைமையிடமாக கொண்ட ‘யுனிபோர் சாப்ட்வேர் சிஸ்டம்ஸ்’ என்ற நிறுவனத்தை கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கினார். உலகம் முழுவதும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
உமேஷ் சச்தேவ் உருவாக்கிய சாப்ட்வேர், தொலைபேசியில் ஒரு முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும், அதனை மறுமுனையில் கேட்பவரால் புரிந்து கொள்ளும்வகையில் மாற்றக்கூடியது. இதன்மூலம், அவசரகால உதவி மையங்களை தொடர்பு கொள்ளும் பொதுமக்கள், தங்கள் தாய்மொழியிலேயே பேசி, ஆன்லைன் வங்கி சேவை, வானிலை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறலாம்.
25 உலக மொழிகளிலும், 150 உள்ளூர் பேச்சு வழக்குகளிலும் பேசி பொதுமக்கள் தகவல்களை பெற இந்த சாப்ட்வேர் பயன்படுகிறது. ஆங்கிலம் தெரியாத மக்களுக்கு இது பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த சாதனைக்காகவே, உமேஷ் சச்தேவ் டைம் பத்திரிகையால் கெளவுரவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary : US ‘Time’ magazine honored Chennai youth.