ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்காக இந்திய ரயில்வே துறை பல்வேறு சலுகைகள் மற்றும் வசதிகளை அவ்வப்போது அறிவித்து வரும் நிலையில் தற்போது ரயில் பயணிகளுக்கு பயணத்தின்போது தேவைப்படும் உணவு வகைகளையும் வழங்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: ரயில் பயணங்களின்போது தரமான உணவுகளை உரிய நேரத்தில் பயணிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது. இப்போது அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், சில சமயங்களில் பெரும்பாலான பயணிகளுக்கு உணவை உரிய நேரத்தில் வழங்க முடிவதில்லை. அதுமட்டுமின்றி, சில பயணிகள் ரயில் உணவுகளை பதிவு செய்ய தவறிவிடுகின்றனர்.

இதுபோன்ற அசௌகரியங்களை களையும் வகையில், ரயில் பயணச் சீட்டிலேயே உணவு வசதியை தேர்வு செய்யும் விருப்ப முறையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, உணவு வசதி தேவையில்லை என்பவர்கள் இதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளலாம். அவர்களுக்கு பயணச் சீட்டுக் கட்டணத்தில் இருந்து உணவுக்கான விலை கழிக்கப்படும்.

முதல்கட்டமாக, மும்பை – நிஜாமுதீன் இடையேயான கிராந்தி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மற்றும் புணே – செகந்தராபாத் இடையேயான சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களிலும் சோதனை முறையில் இத்திட்டம் நேற்று முதல் அதாவது ஜூன் 9 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ரயில்வே அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Railway department plans to provide food for passengers.