சென்னை வண்ணாரப்பேட்டை- ஏஜி டி.எம்.எஸ்., இடையே பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய தடத்தில் மெட்ரோ ரயில் சேவை அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வந்தன. இதில், இரண்டாவது வழித்தடப் பணிகள் நிறைவடைந்து மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. முதல் வழித் தடத்தில், வண்ணாரப்பேட்டை- தேனாம்பேட்டை (ஏ.ஜி. டி.எம்.எஸ்) இடையே 10 கி.மீ. தொலைவுக்கு கட்டுமானப் பணிகள் மற்றும் சுரங்கப்பாதைப் பணிகள் அமைக்கும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது.
இதையடுத்து, இந்த வழித்தடத்தில் பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.மனோகரன் கடந்த 19 ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களை சுட்டிக்காட்டி பணிகளை மேம்படுத்த வேண்டும் என்று நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின்பேரில், மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் ஒருவாரத்தில் முடிந்துவிடும். அதன்பிறகு, பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் கூறியது: வண்ணாரப்பேட்டை- ஏஜி டி.எம்.எஸ். வழித்தடத்தில் ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஆணையர் குறிப்பிட்ட சில பணிகளை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம். எனவே, அடுத்த சில நாள்களில் இந்த தடத்தில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதன்பிறகு, தமிழக அரசுக்கு முறையாக அறிவிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும். அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் வாரத்தில் இந்த தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளது என்றனர் அவர்கள்.