போலிகளையும், விதிமீறலையும் உடனடியாக கண்டுபிடிக்கும் வகையில் நாடு முழுவதும் ஸ்மார்ட் கார்டு வடிவத்தில் மட்டுமே வாகன ஓட்டுநர் உரிம அட்டை மற்றும் ஆர்.சி.புத்தகம் மின்னணு முறையில் (ஸ்மார்ட் கார்ட்) மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வாகன ஓட்டுநர் உரிம அட்டை மற்றும் ஆர்.சி.புத்தகம் ஆகியவற்றை காகித வடிவத்தில் வழங்குவதை கைவிட்டு விட்டு, நாடு முழுவதும் அவற்றை பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில் மின்னணு முறையில் (ஸ்மார்ட் கார்ட்) வழங்க மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் அட்டையில் போலிகளை தடுக்கவும், குழப்பங்களை தவிர்க்கவும், பாதுகாப்புக்கும் மின்னணு ஓட்டுநர் உரிம அட்டை வழங்கப்படும் புதிய விதிமுறைகளை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. இந்த கார்டுகளை தரமாகவும், நீடித்து உழைக்கும்படியாகவும் பி.வி.சி. அல்லது பாலி கார்பனைட்டால் மாநில அரசுகள் தயாரித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
ஆர்.சி.புத்தகம் காகித வடிவில் இருந்ததால் கையாள்வதில் சிரமங்கள் ஏற்பட்டு வந்தது. மேலும் ஓட்டுநர் அட்டைகளை போலியாக தயாரிக்கவும் வாய்ப்பிருந்தது. இந்த திட்டத்தால் அவற்றை எல்லாம் தவிர்க்க முடியும்.