கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவில் பி.வி.எஸ்சி. படிப்பில் 60 பேர் சேர்க்கை பெற்றனர். பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச். கால்நடை மருத்துவப் படிப்பு மற்றும் பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக். பால்வளத் தொழில்நுட்பம் போன்ற படிப்புகளுக்கான சேர்க்கையை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
இந்த படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிவில் பி.வி.எஸ்சி. படிப்பில் 60 இடங்களும், பி.டெக் . படிப்புகளில் 41 இடங்களும் காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டது. இதில் பி.வி.எஸ்சி. படிப்புக்கு அழைக்கப்பட்ட 117 பேரில், 60 பேர் இடங்களைத் தேர்வு செய்து சேர்க்கைக் கடிதம் பெற்றனர். இதில் அனைத்து இடங்களும் நிரம்பின.
பி.டெக். படிப்பில் விளையாட்டு வீரர்களுக்கான பிரிவின் கீழ் 2 பேரும், பி.டெக். உணவு தொழில்நுட்பப் படிப்பில் 11 பேரும், பால்வளத் தொழில்நுட்பப் படிப்பில் 7 பேரும், கோழியினத் தொழில்நுட்பப் படிப்பில் 21 பேரும் இடங்களைத் தேர்வு செய்து சேர்க்கை ஆணை பெற்றனர். அதன் மூலம் பி.டெக். படிப்புகளிலும் அனைத்து இடங்களும் நிரப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.