வியட்நாம் நாட்டிற்கு செல்பவர்களின் வசதியை முன்னிட்டு புதிய விசா விண்ணப்ப மையம் ஒன்று சென்னையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. சென்னை எத்திராஜ் சாலையில் அமைந்துள்ள இந்த விசா விண்ணப்ப மையத்தின் திறப்பு விழாவில் இந்தியாவுக்கான வியட்நாம் தூதர் டான் சின் தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விண்ணப்ப மையத்தை திறந்து வைத்த பின்னர் அவர் பேசியதாவது:

இந்தியர்களின் வசதிக்காக புதிய விசா மையங்களை திறப்பதற்கு 2015-ம் ஆண்டில் முன்னுரிமை கொடுக்கவுள்ளதாகவும், இதன் முதல் நடவடிக்கையாக ஐராபாத்தில் கடந்த 27ஆம் தேதி புதிய விசா மையத்தை திறந்து வைத்ததை அடுத்து தற்போது சென்னையிலும் விசா விண்ணப்ப மையத்தை திறந்துள்ளதாகவும் கூறினார். ஏற்கனவே கொல்கத்தாவில் ஒரு விசா விண்ணப்ப மையம் இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து சுற்றுலா மற்றும் பணிநிமித்தம் காரணமாக வியட்நாம் நாட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. கடந்த 2013-ம் ஆண்டில் 18 ஆயிரம் பேர்களும், கடந்த 2014ஆம் ஆண்டில் சுமார் 55 ஆயிரம் பேர் வியட்நாம் சென்றுள்ளனர்.

சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய விசா மையம் தென்னிந்திய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் இந்த மையத்தில் விசாவுக்காக விண்ணப்பித்தால் அதை டெல்லியில் உள்ள வியட்நாம் தூதரகம் உடனடியாக பரிசீலித்து விசா வழங்கும் என்றும் இதற்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் வியட்நாம் தூதர் தெரிவித்துள்ளார்.

சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள ஃபாகுன் டவர்ஸின் 2-வது தளத்தில் அமைந்துள்ள இந்த மையம், திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை இயங்கும். மேலும் விவரங்களுக்கு www.vfsglobal.com/Vietnam/India என்ற இணையதளத்துக்கு சென்று பார்க்கலாம்.