இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கிக்கிடப்பதையே பார்க்கமுடிகிறது. செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் சிறுவயதிலேயே கண்பார்வை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது. இணைய தகவல்களை அள்ளிக் கொண்டு வருவது முதல், செல்பி, போட்டோக்கள், வீடியோக்கள், விளையாட்டுகள் என அத்தனை வாய்ப்புகளையும் ஸ்மார்ட்போன்கள் வாரி வழங்குகின்றன. இதனால் ஸ்மார்ட் போன் வைத்திருப்போரின் சுட்டுவிரலுக்கும் வேலைப்பளு அதிகமாகிவிட்டது.

வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் நொடிக்கு நொடி, நிமிடத்துக்கு நிமிடம் என்று ஸ்மார்ட் போன்களில் வரும் தகவல்கள், செய்திகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்-நடிகையர் பற்றிய விமர்சன மீம்ஸ்களை பார்க்கும் ஆர்வம் மக்களிடையே ஆக்கிரமித்து இருப்பதே அதற்கு காரணம்.

ஸ்மார்ட் போன்களால் எந்த அளவுக்கு நல்ல விஷயங்கள் இருக்கிறதோ, அதற்கு நேர்மாறாக பிரச்சினைகளும் கூடவே உள்ளன. குறிப்பாக குழந்தைச் செல்வங்கள், பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர், சிறுமியர் செல்போன்களில் உள்ள விளையாட்டுகளுக்கு அடிமையாகிப் போகிறார்கள். தங்களது குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு செல்போனை கொடுத்துவிட்டு அதைப்பார்த்து மகிழும் சில பெற்றோரும் உண்டு. ஆனால் அதுவே, பிள்ளைகளை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்பதை ஏனோ அவர்கள் உணருவதில்லை.

முன்பெல்லாம் சிறுகுழந்தைகள் வீட்டு முற்றங்களில் நன்றாக ஓடி விளையாடுவது உண்டு. உடல் தசைகள் இறுக்கம் கொள்ளவும், அவர்களை திடகாத்திரமானவர்களாக அது மாற்றவும் உதவியது. இப்போது பல வீடுகளில் குழந்தைகள் எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கிக்கிடப்பதையே காணமுடிகிறது. இதனால் மழலைகளின் உடல் போதிய வலுப்பெறுவதில்லை. சுறுசுறுப்பு குறைந்து, இயல்பான செயல்பாடுகளில் மந்தநிலை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.

மேலும் செல்போனின் கதிர்வீச்சு குழந்தைகளை எளிதாக தாக்கும். செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் சிறுவயதிலேயே கண்பார்வை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது. போதிய சுய சிந்தனை, கற்பனைத்திறனை பெறும் சக்தி அவர்களுக்கு குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

இதற்கு பெற்றோர் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். குழந்தைகளின் படிப்பு, எதிர்காலத்தை கருதி அவர்கள் கல்வியில் வெற்றிமகுடம் சூட்டும்வரை செல்போன்களை வாங்கிக் கொடுப்பதை தவிர்ப்பதோடு, தங்களது செல்போன்களையும் அவர்கள் பயன்படுத்தாதவாறு கண்காணிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *