agaththiyarகுட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க “அகத்தியர்”. ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.

தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

“சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்”

புரியலை நா விட்டுடுங்க…, நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி. இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,

“ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்”

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?

Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.

ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் “மயிலின் கழுத்துப் பகுதி” என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் “அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்”. இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடித்தாகிவிட்டது.

அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்! வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

English Summary : What does it mitra varuna force? Siddha comes from the spirit of penance?