வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: கடலோர ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. மேலும் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இவை அடுத்த சில தினங்களில் வலுவடைய வாய்ப்புள்ளது. அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சானியில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது. ஒடிஷாவில் கரையைக் கடந்த ‘தித்லி’ தீவிர புயல், வலு குறைந்து மேற்குவங்கம் நோக்கி நகர்ந்து வருகிறது. அரபிக் கடலில் நிலவும் ‘லூபன்’ தீவிரப் புயல், ஏமன் கரையில் இருந்து 610 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது 14-ம் தேதி ஏமன் மற்றும் ஓமன் இடையே கரையை கடக்கும்.