ஜகார்த்தா: ஆசிய பெண்கள் கபடி பைனலில் அதிர்ச்சித் தோல்வியடைந்த இந்திய அணி, வெள்ளிப்பதக்கம் வென்றது.
ஆசிய விளையாட்டு பெண்கள் கபடி பைனலில் ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி, ஈரானை சந்தித்தது. ஆண்கள் அரையிறுதியில் இந்திய அணி, ஈரானிடம் தோற்று இருந்ததால் இப்போட்டி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
முதல் பாதியில் ஒரு கட்டத்தில் இந்திய அணி 13-8 என 5 புள்ளிகள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது. இதன் பின் நமது வீராங்கனைகள் அடுத்தடுத்து தவறு செய்யத் துவங்க முதல் பாதி முடிவில் இந்தியா (13-11) என 2 புள்ளி மட்டும் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் ஈரான் வீராங்கனைகள் தொடர்ந்து புள்ளிகள் குவித்தனர். இதனால் இந்திய அணி 17வது நிமிடத்தில் 13-17 என பின் தங்கியது. கடைசி 5 நிமிடம் இருந்த போது ஈரானை சற்று நெருங்கியது இந்தியா (20-23).
கடைசி நேரத்தில் சாக்சி குமாரி 3 புள்ளிகள் பெற (24-26) இந்தியா மீண்டு விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் ‘ரெய்டு’ சென்ற பிரியங்கா அவுட்டாக, கடைசி நேரமும் முடிந்து விட இந்திய அணி 24-27 என அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
2010, 2014 ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி, இம்முறை வெள்ளிப்பதக்கத்துடன் திரும்புகிறது. தவிர முதன் முறையாக இரு அணிகளும் தங்கம் வெல்லாமல் திரும்புகின்றன.
அழுதார் அஜய்: கடந்த முறை கபடியில் தங்கம் வென்ற இந்திய ஆண்கள் அணியினர் இம்முறை அரையிறுதியில் ஈரானிடம் தோற்று வெண்கலம் வென்றனர். இதே போல பெண்களும் நேற்று ஏமாற்றினர். கடைசி இரண்டு நிமிடம் இருந்த போது பெண்கள் அணி பின் தங்கியதால், ஆண்கள் அணி கேப்டன் அஜய் தாகூர் கண்ணீர் விட்டு அழுதார்.