விரைவு ரயில்களில் குறுகிய தூரம் பயணம் செய்வோர், சாதாரண டிக்கெட் எடுத்திருந்தாலும் ஒரு சில முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யும் வசதியை தெற்கு ரயில்வே நடைமுறைப்படுத்தி உள்ளது.
ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில்களில், சாதாரண டிக்கெட்டில் பகல் நேரங்களில், குறுகிய தூரத்திற்கு முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யும் வகையில் டி-ரிசர்வ்டு எனும் வசதியை ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இந்த வசதி தெற்கு ரயில்வேயில் தமிழகம், கேரளாவுக்கு செல்லும் மொத்தம் 24 விரைவு ரயில்களின் ஓரிரு ‘டிரிசர்வ்டு’ பெட்டிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன.
விரைவு ரயில்களில், ‘டி-ரிசர்வ்டு’ பெட்டி வசதி பல மாதங்களாக உள்ளது. தினமும் ரயிலில் பயணிப்போருக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதிகபட்சம் 100 கிலோமீட்டர் தூரம் வரையில் பயணிக்கலாம். சாதாரண கட்டணத்துடன், 20 முதல் 30 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். வாய்ப்புள்ள மேலும் சில ரயில்களில் இந்த வசதியை விரிவுப்படுத்தி வருகிறோம். பயணிகள் ‘டி-ரிசர்வ்டு’ அல்லாமல் வழக்கமான முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இன்றி பயணித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எந்தெந்த ரயில்களில் டி-ரிசர்வ்டு..?
- சென்னை எழும்பூர் – கேரள மாநிலம், கொல்லம் அனந்தபுரி ரயில்களில் எஸ் 11, 12, பெட்டிகளில் திருநெல்வேலி – கொல்லம் வரை இரு மார்க்கத்திலும் பயணிக்கலாம்.
- எழும்பூர் – ராமேஸ்வரம் இடையே, ராமேஸ்வரம் விரைவு ரயிலில் எஸ் 12, 13 பெட்டிகளில் மானாமதுரை முதல் ராமேஸ்வரம் வரை இரு மார்க்கத்திலும் பயணிக்கலாம்.
- மங்களூர் – எழும்பூர் விரைவு ரயிலில், திருச்சி முதல் மங்களூர் வரை எஸ்.7, எஸ்.8, எஸ்.9, எஸ்.10 ஆகிய பெட்டிகளில் பயணிக்கலாம்.அதே சமயத்தில், மங்களூரில் இருந்து எழும்பூருக்கு இந்த ரயில் வரும் போது, எஸ்.10 பெட்டியில் மட்டுமே பயணிக்க முடியும்.
- தூத்துக்குடி – மைசூர் இடையே இயக்கப்படும் ரயிலில், தூத்துக்குடி முதல் மதுரை வரை எஸ்.4, எஸ்.10, எஸ்.11, எஸ்.13 பெட்டிகளில் பயணிக்கலாம்.
- கன்னியாகுமரி – பெங்களூர் ரயிலில், கன்னியாகுமரி முதல் எர்ணாகுளம் வரை எஸ்.6, 7 ஆகிய பெட்டிகளில் பயணிக்கலாம்.
- நாகர்கோவில் விரைவு ரயிலில் எஸ்.11, எஸ். 12 பெட்டிகளில் திருநெல்வேலி முதல் நாகர்கோவில் வரை சாதாரண டிக்கெட்டில் பயணிக்கலாம்.