திருப்பதி: பிரசித்தி பெற்ற திருமலை ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆகஸ்ட்16ஆம் தேதி வரை திவ்ய தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 300 ரூபாய் கட்டண சிறப்பு தரிசனம் மற்றும் முக்கிய நபர்களுக்கான சிறப்பு தரிசனம் நாளை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 16ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிகளின்படி நடத்தப்படும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் வரும் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதையொட்டி நாளை அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு எந்தவித தடங்கலும் ஏற்படக்கூடாது என்பதற்காக நாளை முதல் 16ஆம் தேதி வரை 6 நாட்கள் ரூ.300 சிறப்பு தரிசனம், இலவச தரிசனம், நடைபாதை தரிசனம், வி.ஐ.பி. தரிசனம், ஆர்ஜித சேவைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம் என அனைத்து வகை தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.

இந்த நாட்களில் திருமலைக்கு வரும் பக்தர்கள் இலவச தரிசன முறையில் மட்டுமே சாமியை தரிசிக்க இயலும். தினமும் 18 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே அனுமதிக்க இயலும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அந்த முடிவில் திடீர் மாற்றத்தை தேவஸ்தானம் செய்துள்ளது. கோவிலுக்குள் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதனால் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் டைம் ஸ்லார்ட் அட்டை பெற்ற இலவச தரிசனம், நடைபாதை தரிசனத்தை திடீரென ரத்து செய்துள்ளது. தரிசன முறையில் தேவஸ்தானம் கொண்டு வந்த திடீர் மாற்றத்தால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று காலையில் திருப்பதிக்கு வந்த நடைபாதை தரிசன பக்தர்கள் ஏழுமலையானை வழிபட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஏற்கனவே ஆன்லைனில் புக்கிங் செய்யப்பட்டிருந்த 300 ரூபாய் தரிசனத்தை மட்டும் 11ஆம் தேதி வரை அனுமதிக்கின்றனர். அதன் பின்னர் 11ஆம்தேதி முதல் 16ஆம் தேதி வரை அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருமலைக்கு நேராக வருபவர்களில், நாளை 50 ஆயிரம் பக்தர்களுக்கும், நாளை மறுநாள் 28 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் எனவும்,16ம் தேதி வரை அடுத்தடுத்த நாட்களில் 25 முதல் 35 ஆயிரம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்த நாள்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களை இலவச தரிசனத்தில் மட்டும் அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 16ஆம்தேதி நள்ளிரவு 12 மணி முதல் வழக்கம் போல் அனைத்து தரிசனங்களும் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *