பல்கலைக்கழகங்களில் எம்.பில் மற்றும் முனைவர் (பிஎச்.டி) பட்டத்துக்கான ஆய்வு மாணவர்கள் சேர்க்கையில், இரு புதிய சலுகைகளைக் கொண்டு வர மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின் படி எம்.பில், பிஎச்.டி ஆய்வு பட்டங்களுக்கான உயர்க்கல்விக்கு நுழைவுத்தேர்வு மற்றும் நேர் முகத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில், பொது மற்றும் ஒதுக்கீடு என அனைத்து தரப்பு மாணவர் களும் 50 சதவிகித மதிப்பெண் பெற வேண்டும். சில நேரங்களில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற முடியாமல் போவதால் நாட்டின் பல பல்கலைகழகங்களில் மாணவர் சேர்க்கையின் சில இடங்கள் நிரப்ப முடியாமல் வீணாகி விடுகின்றன. இதை தடுப்பதுடன் அதன் பலன் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் களுக்கு கிடைக்க மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை திட்ட மிட்டுள்ளது. இந்த புதிய சலுகை களை மாணவர் சேர்க்கை விதி முறைகளில் சேர்க்க பல்கலைக் கழக மானியக் குழுவுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை விரைவில் உத்தரவிட உள்ளது.

இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டு துறை வட்டாரம் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘இந்த சலுகை களின்படி, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு நுழைவு தேர்வில் 40 சதவிகித மதிப்பெண் பெற்றால் போதுமானது. அதன் பிறகும் நிரப்ப முடியாமல் நிலுவையில் உள்ள இடங்களை நிரப்பும் அதிகாரம் பல்கலைக்கழகங்களுக்கு அளிக் கப்படும். இதற்காக, பல்கலைக் கழகங்கள் தனது நுழைவுத் தேர்வின் மதிப்பெண்களில் மேலும் சில சலுகைகளை ஒதுக்கீடு மாணவர்களுக்கு அளிக்கலாம்’’ என்று தெரிவித்தனர்.

இதற்கிடையில், உயர்க்கல்விக் கான மாணவர் சேர்க்கையில் யுஜிசி.யின் விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி அதன் அலுவலகம் முன்பாக டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், விதிமுறை களை முன்புபோல் பல்கலைக் கழகங்களின் நிர்வாகங்களிடம் அளிக்க வேண்டும் என வலி யுறுத்தி வருகின்றனர். இதற்கு சில பாடப்பிரிவுகளின் நுழைவுத் தேர்வு மிகக்கடுமையாக இருப்பது காரணம். இதனால், பல்வேறு சூழல்களில் இருந்து பல்கலைக் கழகங்களில் உயர்க்கல்வி பெற வரும் சில மாணவர்களால் குறைந்தபட்ச மதிப்பெண் கூட பெற முடிவதில்லை எனப் புகார் உள்ளது.

இந்த ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் தாவரவியல், புள்ளியியல், மண்ணியல் மற்றும் பெர்ஷியன் ஆகிய பாடப் பிரிவு களின் நுழைவுத்தேர்வு நடை பெற்றது. இதில் ஒரு மாணவர் கூட குறைந்தபட்ச மதிப்பெண் பெறவில்லை. அதனால் எல்லா இடங்களும் காலியாகவே உள்ள தாகக் கூறப்படுகிறது. எனவே, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை புதிய சலுகைகளை அறி விக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *