1. மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?

பொதுமக்கள் பலரிடமிருந்து பணம் பெற்று பங்குகளிலோ அல்லது கடன் பத்திரங்களிலோ அல்லது தங்கத்திலோ அல்லது இவையனைத்திலுமோ முதலீடு செய்யும் திட்டமே மியூச்சுவல் ஃபண்ட்

2. நான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தே ஆகவேண்டுமா?

கண்டிப்பாக இல்லை. முதலீடு செய்ய இருக்கும் வழிவகைகளில் ஒன்றே மியூச்சுவல் ஃபண்ட்கள். அவை உங்களுக்கு சரியான முதலீடாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் முதலீடு செய்யலாம்

3. யார் / எப்போது மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும்?

இதற்கான பதில் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பொதுவாக, நேரடி பங்கு வர்த்தகத்தில் ஈடுபட விரும்பாதோர், நேரடி பங்குகள் வாங்கி விற்க போதிய அனுபவம், அறிவு அல்லது நேரமில்லாதோர் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். வங்கி வைப்பு நிதி தரும் வட்டியை விட அதிக வளர்ச்சியும், அதை விட குறைந்த வருமான வரியும் வேண்டுவோர் கடன் பத்திரங்கள் கொண்ட மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம்

4. மியூச்சுவல் ஃபண்ட்களை யார் நடத்துகிறார்கள்?

Asset Management Companies அதாவது நிதி நிர்வாக நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வழங்குகின்றன. இவ்வகை நிறுவனங்கள் அனைத்தும் செபியால் (Securities and Exchange Board of India) அங்கீகரிக்கப்பட்டவை. நிறுவனங்கள் மட்டுமல்ல, நிறுவனங்கள் வழங்கும் ஒவ்வொரு ஃபண்டும் செபியின் ஒப்புதல் பெற்ற பின்னரே புழக்கத்துக்கு வரமுடியும்

5. மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்வது என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் நூறு நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வைத்துள்ளது என்றும் அப்பங்குகளின் மொத்த மதிப்பு ஒரு கோடியே ஐந்து லட்ச ரூபாய் என்றும் வைத்துக் கொள்வோம். நிதி நிறுவனம் நடத்துவதற்கு பணம் வேண்டுமல்லவா? அதை அந்நிறுவனம் சந்தாதாரர்களிடமிருந்து கட்டணமாகப் பெறும் – இதை Expense Ratio என்பார்கள், அது ஒரு 5 லட்ச ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். கட்டணம் போக இருக்கும் நிகர தொகை ஒரு கோடி ரூபாய். அதை நிறுவனம் 10,000 பங்குகளாக பிரிக்கும். அப்படி பிரித்தால் ஒரு பங்கு அல்லது யூனிட்டின் மதிப்பு ஆயிரம் ரூபாய். இதுதான் அந்த ஃபண்டின் Net Asset Value (NAV)

Net Asset Value (NAV) ஆயிரம் ரூபாயாக இருக்கும் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புவோர் முதலீடு செய்யும் ஒவ்வொரு ஆயிரத்துக்கும் ஒரு யூனிட் கிடைக்கும். தங்கத்தின் விலை கிராமுக்கு 2500 ரூபாயாக இருக்கும் போது 10,000 ரூபாய்க்கு 4 கிராம் கிடைக்குமல்லவா, அது போலத்தான் இதுவும்.

5 ஆயிரத்துக்கு 5 யூனிட்கள் வாங்கிட்டீங்க. ஐந்தாண்டுகள் கழித்து ஃபண்டின் நெட் அசெட் வேல்யூ 700 ரூபாயாக குறைந்து விடுகிறது. அப்ப நீங்க உங்க 5 யூனிட்களை விற்றால் உங்களுக்கு 3500 ரூபாய் கிடைக்கும். அதாவது 1500 ரூபாய் நஷ்டம். 5 ஆண்டுகளுக்குப் பிறகு என் ஏ வி 2000 ரூபாயாக ஆகியிருந்தால் அவற்றை விற்கும் போது உங்களுக்கு 10,000 ரூபாய் கிடைக்கும். லாபமான 5000இல் Long Term Capital Gain போக 4500 ரூபாய் லாபம் கிடைக்கும்.

சுருக்கமாகச் சொன்னால், வாங்கும் போது யூனிட்டின் அன்றைய NAV கொடுத்து வாங்க வேண்டும் விற்கும் அன்று என்ன NAVயோ அந்த விலைக்கு விற்க வேண்டும். இதுதான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் முறை

6. மியூச்சுவல் ஃபண்டில் லாபத்துக்கு உத்தரவாதம் உண்டா?

நீண்டகால முதலீட்டில் மியூச்சுவல் ஃபண்ட்கள் நல்ல லாபம் கொடுத்துள்ளன என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும் எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பதே உண்மை. மேலே சொன்ன மாதிரி வாங்கும் அன்றும் விற்கும் அன்றும் என்ன NAV உள்ளதோ அவ்விலைக்கே வாங்க / விற்க முடியும்.

7. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பாதுகாப்பானவையா?

இதற்கு பதில் நீங்கள் பாதுகாப்பு என்று எதை நினைக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது.

நிதி நிறுவனங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிடுமா என்று கேட்டால், அப்படி நடப்பதற்கு வாய்ப்பு அரிதிலும் அரிது. அப்படி நடக்காமல் இருக்க மத்திய அரசின் செபி நிறுவனம் பாதுகாப்பு அம்சங்களை வகுத்துள்ளது

லட்ச ரூபாய் முதலீடு செய்கிறேன். வட்டி மிகக் கம்மியா வந்தாலும் பரவாயில்லை, போட்ட முதல் துளி கூட கம்மியாகக்கூடாது அப்படிப்பட்ட பாதுகாப்பு இருக்கான்னு கேட்டா இல்லை என்பதே பதில்

8. மியூச்சுவல் ஃபண்ட்கள் ரிட்டர்னுக்கு உத்தரவாதம் இல்லை, பணம் இழக்கவும் வாய்ப்பு இருக்கு. அப்புறம் நான் ஏன் அதில் முதலீடு செய்ய வேண்டும்?

இதற்கு பதில் தெரிந்து கொள்ள ரிஸ்க் – லாபம் இவற்றுக்கிடையே உள்ள உறவை தெரிந்து கொள்ள வேண்டும். அதிக ரிஸ்க் உள்ள முதலீட்டில்தான் அதிக வளர்ச்சி கிடைக்கும். ரிலேட்டிவிலி கம்மி ரிஸ்க் கொண்ட முதலீடுகள் (உதாரணத்துக்கு வங்கிக் கணக்கில் வைத்திருக்கும் 1 லட்ச ரூபாய் வரை காப்பீடு உண்டு) விலைவாசியை விட அதிக வட்டி தருவதில்லை. நீண்ட காலத்துக்கு விலைவாசியை விட அதிக வளர்ச்சி வேண்டுமென்றால் கொஞ்சம் ரிஸ்க் எடுத்துத்தான் ஆக வேண்டும்.

6 முதல் 8 ஆண்டுகளில் விலைவாசி இரட்டிப்பாகும். உங்க வயசு 40, இப்ப குடும்பச் செலவுக்கு 25,000 ரூபாய் ஆகுது. ரிட்டையர் ஆகும் போது இதே லைஃப் ஸ்டைலுக்கு மாதம் 2 லட்ச ரூபாய் ஆகும். அப்ப நீங்க வேலைக்கும் போக மாட்டீங்க. ரிட்டையர்மெண்ட்ட்டுக்கு தேவைப்படும் பணத்தை பாதுகாப்பான முதலீடுகளில் மட்டும் சேமிக்க உங்களால் முடியுமா? அப்படி முடியுமென்றால் மியூச்சுல் ஃபண்ட் மட்டுமல்ல வேறெந்த ரிஸ்கான முதலீட்டிலும் நீங்கள் பணம் போட வேண்டியதில்லை

9. மியூச்சுவல் ஃபண்டில் என்ன வகைகள் உள்ளன?

• Equity mutual fund: பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் – இந்திய நிறுவனங்களின் பங்குகளைக் கொண்ட ஃபண்ட்
• Debt mutual fund or fixed income mutual fund: கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் ஃபண்ட்
• Gold mutual fund: தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்ட ஃபண்ட்
• Hybrid mutual fund: மேலே சொன்ன அனைத்தும் கொண்ட கலவை
10. டிவிடெண்ட், க்ரோத் ஆப்சன் என்றால் என்ன?

Growth option and Dividend option என்று ஒவ்வொரு ஃபண்டிலும் ரெண்டு தெரிவுகள் இருக்கும். ஃபண்டை நிர்வகிக்கும் ஃபண்ட் மேனேஜர் இருக்கும் பணத்தை பங்குகளிலோ கடன் பத்திரங்களிலோ முழுவதும் முதலீடு செய்து வளர்ச்சியை மட்டும் நோக்கி செயல்படுவார். முதலீட்டாளர்கள் பணத்தை திரும்ப கேட்கும் போது கையிருப்பிலிருந்தோ அல்லது பங்குகளை விற்றோ பணத்தைத் தருவார். மற்றபடி நடுவில் முதலீட்டாளர்களுக்கு பணம் ஏதும் தர வேண்டியதில்லை. இது Growth option

ஃபண்ட் நிர்வாகி அவ்வப்போது பங்குகளை விற்று வரும் லாபத்தை அப்போதே பங்கிட்டு வழங்குவார். இது Dividend option. மாதாந்திர செலவுக்கு பணம் தேவைப்படுவோர் மட்டும் Dividend option தேர்வு செய்யலாம். நீண்ட கால முதலீட்டாளர்கள் மற்றும் ஓய்வு கால திட்டமிடலுக்காக சேமிப்போர் Growth option தேர்வு செய்வது நல்லது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *