திருப்பூர்: தபால் துறை துவக்கிய ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கிதிட்டம்’ வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வங்கி சேவையை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. சேமிப்பு கணக்கு துவங்க வைப்பு தொகை வேண்டியதில்லை. ஆதார், மொபைல் எண் இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும், உடனே கணக்கு துவக்கி கொள்ளலாம். குறைந்தபட்ச தொகை இவ்வளவு இருக்க வேண்டும் என்பது உட்பட எந்த கெடுபிடியும் இல்லை.
இதனால், பொதுமக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது.திருப்பூர் தபால் மாவட்டத்தில், தலைமை தபால் அலுவலகம், தெக்கலுார், குப்பாண்டம்பாளையம், அவிநாசி, கைகாட்டிபுதுார் ஆகிய ஐந்து தபால் அலுவலகத்தில் துவங்கப்பட்டது. திட்டம் துவங்கிய, 25 நாட்களில் மாவட்டத்தின் ஐந்து மையங்களில், 1,471 பேர் கணக்கு துவக்கியுள்ளனர். தபால்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘திட்டத்தில் சேமிப்பு கணக்கில் குறைந்த பட்ச இருப்பு தொகை வேண்டியதில்லை.
நடப்பு கணக்கில் குறைந்த பட்ச வைப்பு தொகை, ஆயிரம் ரூபாய். தபால் அலுவலகத்துக்கு வர முடியாவிட்டால் வீட்டில் இருந்தே கணக்கு துவங்கலாம். வங்கி, மொபைல் போன் மூலம் பண பரிமாற்றம் செய்ய முடியும். போன், மின்சாரம், டி.டி.எச்., கட்டணம் மற்றும் கல்வி கட்டணமும் செலுத்தலாம். மத்திய, மாநில அரசின் பல்வேறு பணப்பயன், நலத்திட்ட உதவி தொகை பெறமுடியும்,’ இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆரம்பத்தில் மாவட்டத்தின் ஐந்து இடங்களில் அடுத்தடுத்து பிற பகுதியிலும் ‘இந்திய போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி திட்டம்’ துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. அடுத்தடுத்த தபால் நிலையங்களில் தாமதமின்றி திட்டத்தை துவக்கி வைத்தால், இவ்வாண்டு இறுதிக்குள் குறைந்த பட்சம், 10 ஆயிரம் பேர் கணக்கு துவங்கும் வாய்ப்புள்ளது.