மனிதப் பிறவியில், வாழ்வில் ஒருமுறையேனும் திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீப விழாவை, மலையில் ஜொலிக்கும் அந்த மகா தீபத்தை, பிரமாண்ட ஜோதியைத் தரிசிக்கவேண்டும் என்றும் அப்படித் தரிசித்தால் பாவங்கள் தொலைந்து புண்ணியம் பெருகும் என்றும் சொல்கிறார்கள் பெரியோர்!
திருவண்ணாலை ஸ்ரீஅண்ணாமலையார் ஆலயத்தில், திருக்கார்த்திகை தீப விழா, பத்து நாள் விழாவாகக் கோலாகலமாக நடைபெறுகிறது. திருக்கார்த்திகை நாளில்… மலையே சிவமெனத் திகழும் அந்த அற்புத மலையின் உச்சியில், மகா தீபம் ஏற்றும் வைபவம் நடைபெறுகிறது.
இந்த வேளையில், கார்த்திகை தீப விழாவின் சிறப்புகளைப் பார்ப்போமா?
கார்த்திகை தீப விழாவின் முதன்மையான நிகழ்வு சொக்கப் பனை ஏற்றுதல். பனை மரத்தை பூலோக கற்பக விருட்சம் என்றும், பொற்பனை என்றும் சொல்வார்கள். மேலும் அது அக்னியின் வடிவம் என்கிறது இந்துமதம். ருத்ர அம்சமும் கூட!
கார்த்திகை தீப நாளில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன்னுள்ள முற்றத்தில் வெட்டவெளியில் நடுவார்கள். அதைச் சுற்றி 10 அல்லது 15 அடி உயரத்துக்கு பனை ஓலைகளைக் கொண்டு கூம்பு போன்று அமைப்பார்கள்.மாலையில் ஆலயங்களின் உச்சியில் தீபம் ஏற்றியதும், பஞ்ச மூர்த்திகளுக்குத் தீபாராதனை செய்து, கோயிலுக்கு முன்புறம் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கூம்புகளுக்கு முன்பாக எழுந்தருளச் செய்வார்கள். பின்னர், ஸ்வாமிக்கு தீபாராதனை செய்து, அந்தச் சுடரைக் கொண்டு, சொக்கப்பனைகளைக் கொளுத்துவர். சுடர் வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரியும். அந்த ஜோதியை சிவமாகவே நினைத்து வழிபடுவது ஐதீகம்!
சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை தைலத்துடன் சேர்த்து ரட்சையாக காப்பாக நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம். சாம்பலை எடுத்துச் சென்று வயல்வெளிகளில் தூவினால், அந்த முறை அமோக விளைச்சல் நிச்சயம் என்பது ஐதீகம்!
சில தலங்களில் இரட்டை சொக்கப்பனைகளைக் கொளுத்தி வழிபடுகின்றனர். திருமால் ஆலயங்களிலும் சொக்கப்பனை விழா தனிச்சிறப்புடன் நடைபெறும்.
இதில் ஆச்சரியம்… கார்த்திகை தீபத்துக்குப் பெயர் பெற்ற திருவண்ணாமலையில், சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் இல்லை!