கிழக்குத் திசைக் காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை (நவ. 29) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வடகிழக்குப் பருவ மழை காலத்தையொட்டி, கிழக்குத் திசைக் காற்று வலுப்பெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை காலை வரை (நவ. 29) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த கிழக்குத் திசை காற்று காரணமாக வியாழக்கிழமை (நவ. 29) உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதேபோன்று திண்டுக்கல், சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, பெரம்பலூர், மணப்பாறை, அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூர், கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிளிலும் மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், நாகை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.