கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.2 லட்சத்துக்கு மேல் தங்க நகை வாங்குபவர்கள் கண்டிப்பாக பான்கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டதால் தங்களுடைய வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தங்கநகை வியாபாரிகள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் முதல் முறையாக தங்க நகைகளுக்கு 1 சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது தங்க நகை வியாபாரிகளை மேலும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்த போக்கை கண்டித்தும், கலால் வரியை திரும்ப பெறக்கோரியும் தங்க நகை நிறுவனங்கள், வியாபாரிகள், நகை தொழில் சார்ந்த தொழிற்கூடங்கள் 3 நாட்களுக்கு கடைகள் அடைப்பு போராட்டத்தை அறிவித்து இருந்தனர்.
அதன்படி சென்னையில் 7,000 நகைக்கடைகள் அடைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டது. சென்னையில் தி.நகர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், மயிலாப்பூர் உள்பட பல இடங்களில் நகைக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததால் சுமார் ரூ.1000 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த கடை அடைப்பு போராட்டம் குறித்து சென்னை வைரம், தங்கம், வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:
மத்திய பட்ஜெட்டில் அறிவித்த தங்க நகை மீதான 1 சதவீத கலால் வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் 3 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும். மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு 12 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். பொது மக்களின் மீதான கூடுதல் சுமையை தவிர்க்க முன் வர வேண்டும். கலால்வரி சட்டம் மிக கடுமையான சட்டம் அதை நகை தொழில் மீது திணிப்பதை திரும்ப பெற வேண்டும். ரூ.2 லட்சத்துக்கு நகை வாங்கும் போது பான் கார்டு கட்டாயம் என்பதையும் ரத்து செய்ய வேண்டும். நகை வியாபாரிகளின் போராட்டம் இந்தியா முழுவதும் இன்றும் தொடங்கி நடந்து வருகிறது.
English Summary: 1% excise tax, including Chennai and all over Tamil Nadu to protest of the gold jewelery shops Owners.