இந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி-எம்) தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த கல்வி நிறுவனமாக பெங்களூரு ஐஐஎஸ்சி நிறுவனம் தேர்வாகியுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் ஆகியவற்றின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில், நிகழாண்டுக்கான தரவரிசைப் பட்டியலை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
அதில், நாட்டிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி-எம்) தேர்வாகியுள்ளது. அதேபோல், சிறந்த கல்வி நிறுவனமாக பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐஐஎஸ்சி) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனமாக குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (ஐஐஎம்-ஏ) தேர்வு செய்யப்பட் டிருக்கிறது. டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ‘மிராண்டா ஹவுஸ்’, நாட்டிலேயே சிறந்த கல்லூரி என்ற பெருமையை பெற்றுள்ளது.
சிறந்த மருத்துவக் கல்லூரியாக டெல்லி எய்ம்ஸும், சிறந்த சட்டக்கல்லூரியாக பெங்களூருவில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகமும் தேர்வாகியுள் ளது.
சென்னைப் பல்கலைக்கழகம்
சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் சென்னைப் பல்கலைக்கழகம் 18-வது இடத்தைப் பிடித்து தரவரிசைப் பட்டியலில் முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில் சென்னைப் பல்கலைக்கழகம் 41-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்கேற்பது கட்டாயம்
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்த தரவரிசை நிர்ணய செயல் திட்டத்தில், அனைத்து அரசு கல்வி நிறுவனங்களும் அடுத்த ஆண்டு முதல் பங்கேற்க வேண்டும் என்று அந்தத் துறைக்கான அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
மேலும் இதில் பங்கேற்காத கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் எச்சரித்தார்.
English Summary: IIT Madras to Selected a Best Engineering College in India.