பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சென்னை மாநகர போக்குவரத்துப் பேருந்தில் விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர பயண அட்டை கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் 800 வழித்தடங்களில் 3,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் நாள்தோறும் 35 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். அரசுப் பேருந்துக் கட்டண உயர்வுக்குப் பிறகு மின்சார ரயில், இரு சக்கர வாகனம், ஆட்டோ, ஷேர் ஆட்டோ போன்ற மாற்று போக்குவரத்துக்கு பயணிகள் மாறியதால், மாநகர் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைந்தது. தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஷேர் ஆட்டோ, ஆட்டோ கட்டணமும் உயர்ந்துள்ளது. மேலும் மாநகர் பேருந்துகளில் சாதாரணக் கட்டணம், குறைந்தபட்சம் ரூ.5 என்ற ஸ்டிக்கர் ஒட்டி அதிக பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் மீண்டும் மாநகர் பேருந்தில் பயணம் செய்வது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி மாதாந்திர பயண அட்டைக்கான கட்டணத்தை உயர்த்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது மாதம் முழுவதும் விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர பயண அட்டை தற்போது ரூ.1000-க்கு வழங்கப்பட்டு வருகிறது. இது ரூ.1,200 முதல் 1,300 வரை உயர்த்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மாதாந்திர பயண அட்டையை தற்போது மாதம்தோறும் 1லட்சத்து 20,000 பேர் பயன்படுத்துகின்றனர். ஏற்கெனவே நிதிச்சுமையில் சிக்கித் தவிக்கும் மாநகர் போக்குவரத்துக் கழகத்துக்கு, டீசல் விலை உயர்வால் மேலும் நிதிச்சுமை கூடிவருகிறது. எனவே மாதாந்திர பயண அட்டைக்கான கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதால் அக்கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறியது: பேருந்துக் கட்டண உயர்வு தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் அரசுதான் முடிவு செய்ய வேண்டும். அது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. ஆகையால் இது குறித்து நாங்கள் எதுவும் கருத்துக்கூற இயலாது. மேலும் கட்டணம் உயர்வு, குறிப்பாக மாதாந்திர பயண அட்டைக் காண கட்டண உயர்வு தொடர்பாக எவ்வித தகவலும் எங்களுக்கு அரசிடம் இருந்து இதுவரை வரவில்லை எனத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *