சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தங்கள் செல்போன் மூலம் காகிதமில்லா டிக்கெட் பெறும் வசதியை கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி அறிமுகம் செய்தது. இந்தியாவிலேயே சென்னையில்தான் இந்த வசதி முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்கட்டமாக சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம் வரை மட்டுமே இந்த வசதி செயல்படுத்தப்படும் என்றும் அதன்பின்னர், பயணிகளின் உபயோகத்தை பொறுத்து காகிதமில்லா டிக்கெட் பெறும் வசதி விரிவாக்கம் செய்யப்படும் என்று அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தெற்கு ரெயில்வே இந்த சேவையை விரிவாக்கம் செய்திருப்பதாக அறிவித்தது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காகிதமில்லா டிக்கெட் பெறும் வசதி தற்போது சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி, சென்னை கடற் கரை-திருவள்ளூர், சென்னை கடற்கரை-வேளச்சேரி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இதை பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இண்டர்நெட் வசதியுள்ள ‘ஆண்டிராய்டு’ செல்போன் மூலம் கூகுள் ‘பிளே ஸ்டோர் சென்று’ ‘யு.டி.எஸ். மொபைல் டிக்கெட்டிங்’ என்ற அப்ளிகேஷனை முதலில் டவுன்லோடு செய்ய வேண்டும். அதன்பின்னர், ‘ரெயில்வே இ வாலெட்’டில் கணக்கு தொடங்க வேண்டும். இந்த கணக்கை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது டிக்கெட் கவுண்ட்டர்களில் டாப் அப் செய்யலாம். இதற்கு டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுகளையும் பயன்படுத்தலாம்.
இதையடுத்து, ‘யு.டி.எஸ். மொபைல் டிக்கெட்டிங்’ அப்ளிகேஷனை ‘கிளிக்’ செய்தால், புறப்படும் இடம் மற்றும் சேரும் இடம் கேட்கும். அதில் இடங்களை பதிவு செய்துவிட்டு, அதன்பின்னர், எத்தனை டிக்கெட் வேண்டும் என்பதை பதிவு செய்ய வேண்டும். தகவல்கள் அனைத்தையும் பதிவு செய்தவுடன், டிக்கெட் சரியாக பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று குறிப்பிடும். அதன்பின்னர் ‘ஓகே’ என்ற பட்டனை அழுத்தினால், டிக்கெட் முழுமையாக பதிவு செய்யப்பட்ட அந்த திரை வரும்.
இந்த டிக்கெட்டின் பதிவு செய்யப்பட்ட நேரத்தில் இருந்து 1 மணி நேரம் வரை மட்டுமே செல்லுபடியாகும். டிக்கெட்டை மற்றவர்களுக்கு அனுப்பவோ அல்லது மாற்றம் செய்யவோ முடியாது. டிக்கெட் பரிசோதகர் வரும்போது ‘ஷோ ஆப்ஷன்’ என்ற பட்டனை அழுத்தி அதில் தெரியும் பதிவு செய்த டிக்கெட்டை காண்பிக்க வேண்டும்.
English summary: Chennai Sub-Urban Trains: Tickets buying through Mobiles Scheme Expands. This will help peoples to buy the tickets without standing in long queue at Railway Ticket Counters.